×

கோவை காட்டுப்பகுதியில் கதாசிரியர் கொலை

கோவை: கோவை காட்டுப்பகுதியில் கதாசிரியர் வெட்டிக்கொலை செய்யப்பட்டார். திருவள்ளூர்  ஆவடி பகுதியை சேர்ந்த கிருஷ்ணன் என்பவர் மகன் செந்தில் சுபாஷ் (38). இவர்  பெரியநாயக்கன்பாளையம் பகுதியில் மீடியா நிறுவனம் ஒன்றை நடத்தி வந்தார். கதை எழுதி புத்தகமாகவும் வெளியிட்டு வந்தார். நாடகங்களுக்கு கதை, வசனம் எழுதி கொடுத்து வந்தார். தனது நண்பர் ஒருவரை சந்திக்க வேண்டும் எனக்கூறி கடந்த 13ம் தேதி வீட்டில் இருந்து வெளியே சென்றார். மீண்டும் இவர் வீட்டுக்கு வரவில்லை.

நேற்று முன்தினம் மதுக்கரை அறிவொளி நகர் பகுதியில் உள்ள ஒரு காட்டுக்குள் அழுகிய நிலையில் சடலம் கிடந்தது. அந்த பகுதியில் விறகு வெட்ட சென்றவர்கள் எலும்புக்கூடு கிடப்பதாக மதுக்கரை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் அங்கே சென்று விசாரித்தபோது இறந்தது செந்தில் சுபாஷ் என தெரியவந்தது. இவரது தலையில் 3 இடங்களில் அரிவாள் வெட்டு இருந்தது. சடலம் அழுகி எலும்புப்கூடாக  காணப்பட்டது. இவர் பயன்படுத்திய செல்போன் அதே பகுதியில்  கிடந்தது. மதுக்கரை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இறந்த நபரின் நண்பர் வீடு கேரள மாநிலம் திருச்சூரில் இருப்பதாக தெரிகிறது.

நண்பர் வீட்டிற்கு செல்வதாக கூறி வீட்டில் இருந்து சென்றுள்ளார். ஆனால் இவர் அறிவொளி நகர் பகுதிக்கு ஏன் சென்றார்? என்பது தெரியவில்லை. இவர் கடந்த 13ம் தேதி கடைசியாக தனது தங்கை சுப பிரியா என்பவரை செல்போனில் தொடர்பு கொண்டு பேசினார். அதற்கு பிறகு அவரது செல்போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டு இருந்தது. இவரை மர்ம நபர்கள் வாகனத்தில் கடத்தி சென்று அரிவாளால் வெட்டி கொலை செய்துவிட்டு தப்பியிருக்கலாம், இறந்து 15 நாட்கள் ஆகியிருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். போலீசார் செல்போனில் பதிவான தொடர்பு எண்களை வைத்து விசாரித்து வருகின்றனர். காட்டுப்பகுதியில் நடந்த இந்த கொலை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags : Coimbatore , Storyteller murdered in Coimbatore jungle
× RELATED கோவை மாநகராட்சி நீச்சல் குளத்தில் குவியும் சிறுவர்கள்