×

தலையில் கல்லை போட்டு கொன்று ஆட்டோ டிரைவர் சடலத்துடன் செல்பி எடுத்த ரவுடி: சமூக வலைதளத்தில் பதிவிட்டதால் சிக்கினார்; சென்னையில் பரபரப்பு சம்பவம்

சென்னை:  சென்னை மற்றும் சுற்றுவட்டார மாவட்டங்களில் நேற்று முன்தினம், ஆண் சடலத்துடன் வாலிபர் ஒருவர் செல்பி எடுத்த புகைப்படம், சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. இதுபற்றி அறிந்த மணலி புதுநகர் போலீசார், அந்த புகைப்படத்தை பதிவிட்ட நபர் குறித்து விசாரணை மேற்கொண்டனர். இந்நிலையில், மணலி புதுநகர் வெற்றி நகர் அருகே உள்ள புதரில் ஆண் சடலம் கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில், போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பார்த்தபோது, அந்த சடலம் சமூக வலைதளங்களில் பதிவிடப்பட்ட சடலம் என தெரியவந்தது. அந்த சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். முதற்கட்ட விசாரணையில், கொலையான நபர் மணலி புது நகரை சேர்ந்த ஆட்டோ டிரைவர் ரவிச்சந்திரன் (32) என்பது தெரிந்தது.

இதனிடையே, சடலத்துடன் செல்பி எடுத்து சமூக வலைதளத்தில் பதிவிட்ட நபர், மணலி புதுநகர் பழைய நாப்பாளையம் பகுதியை சேர்ந்த பிரபல ரவுடி மதன் (32) என்பது தெரியவந்தது. அவரை தேடியபோது, அதே பகுதியில் உள்ள பள்ளி மைதானத்தில் கூட்டாளிகளுடன் பதுங்கி இருப்பது தெரிந்தது. அவர்களை சுற்றிவளைத்து பிடித்து விசாரித்தனர். அதில், ரவுடி மதன் கடந்த 2 நாட்களுக்கு முன் போதையில் இருந்தபோது, ஆட்டோ டிரைவர் ரவிச்சந்திரனுடன் தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது அங்கிருந்தவர்கள் இருவரையும் சமாதானம் செய்து அனுப்பியுள்ளனர். ஆனால், ஆத்திரம் தீராத ரவுடி மதன், தனது கூட்டாளிகளுடன் சேர்ந்து ரவிச்சந்திரனை தீர்த்துக்கட்ட திட்டமிட்டுள்ளார்.

அதன்படி நேற்று முன்தினம் மதியம் மதன் தனது கூட்டாளிகள் குத்தா (எ) ஜெயப்பிரகாஷ் (19), பரத் (26), பப்லு (எ) தனுஷ் (27) ஆகியோருடன் சேர்ந்து ரவிச்சந்திரன் வீட்டுக்கு சென்று, சண்டையை மறந்து சமாதானம் பேசலாம் வா, என ரவிச்சந்திரனை அழைத்துள்ளனர். அப்போது அவரின் மனைவி கீர்த்தனா, போக வேண்டாம் என்று கணவனை தடுத்துள்ளார். ஆனால், சமாதானம் செய்ய தானே போகிறேன். வந்து விடுகிறேன், என்று கூறிவிட்டு மதன் மற்றும் அவனது கூட்டாளிகளுடன் பைக்கில் சென்றுள்ளார்.

அனைவரும் மணலி புதுநகர் வெற்றி நகர் அருகே ஆள் நடமாட்டம் இல்லாத பகுதிக்கு சென்று, ரவிச்சந்திரனுடன் சமாதானமாக பேசுவது போல் நடித்த மதன் மற்றும் அவனது கூட்டாளிகள், மறைத்து வைத்திருந்த அரிவாளால் திடீரென ரவிச்சந்திரனை சரமாரியாக வெட்டியுள்ளனர். இதில் ரவிச்சந்திரன் மயங்கி விழுந்தார். பின்னர், அங்கிருந்த கல்லை எடுத்து ரவிச்சந்திரன் தலையில் போட்டு, முகத்தை சிதைத்து கொலை செய்தனர். பின்னர், ரவிச்சந்திரன் சடலத்துடன் மதன் தனது செல்போனில் செல்பி எடுத்து சமூக வலைதளங்களில் பரப்பியது தெரிந்தது. இவர்கள் மீது ஏற்கனவே கொலை முயற்சி, அடிதடி போன்ற பல்வேறு வழக்குகள் உள்ளதும் தெரியவந்தது. இதையடுத்து 4 பேர் மீதும் கொலை வழக்கு பதிவு செய்து, சிறையில் அடைத்தனர்.

Tags : Rowdy ,Chennai , Rowdy takes selfie with auto driver's body after throwing stone at head: Caught getting caught posting on social website; Exciting incident in Chennai
× RELATED குண்டர் சட்டத்தில் ரவுடி கைது