×

‘எனது விலைப்பட்டியல்-எனது உரிமை’ என்ற புதிய திட்டம் செயல்படுத்தப்படும் சார்-பதிவாளர் அலுவலகங்கள் சனிக்கிழமைகளிலும் செயல்படும்

* தட்கல் முறை அறிமுகம்
* இணையவழியில் திருமண சான்று திருத்தம்
* அமைச்சர் பி.மூர்த்தி அறிவிப்பு

சென்னை: சட்டப்பேரவையில் அமைச்சர் பி.மூர்த்தி நேற்று வெளியிட்ட அறிவிப்பு:
* வணிகவரித்துறையில் ‘எனது விலைப்பட்டியல்-எனது உரிமை’ என்ற திட்டம் செயல்படுத்தப்படும். பொதுமக்கள் தாங்கள் பெறும் விலைப்பட்டியல்களின் ஒளிநகல்களை வணிகவரித் துறையின் இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய கேட்டுக் கொள்ளப்படுவார்கள். காலமுறை அடிப்படையில் குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்கப்படுபவர்களுக்கு பரிசுகள் வழங்கப்படும். வரி ஏய்ப்பினைத் தடுப்பதில் உதவுபவர்களுக்கு வெகுமதி அளிக்க ரூ.1.66 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.
* வணிக வரித்துறையின் நுண்ணறிவு பிரிவில் தனியார் தொழில்நுட்ப வல்லுநர்களின் சேவை பயன்படுத்தப்படும்.  வணிகவரித்துறையில் வரி ஆய்வுக் குழு அமைக்கப்படும்.
* சென்னை மற்றும் கோவையில் உள்ள இரண்டு இணை ஆணையர் நுண்ணறிவு பணியிடங்கள் கூடுதல் ஆணையர் நிலைக்கு உயர்த்தப்படும்.பத்திரப்பதிவு தொடர்பான சேவைகளை அளிக்க ‘ஒருங்கிணைந்த சேவை மையம்’ சென்னை மற்றும் கோவையில் உருவாக்கப்படும்.
* பதிவுத்துறையில் ஒருங்கிணைந்த தகவல் மையம் ரூ.50 லட்சம் செலவில் உருவாக்கப்படும்.
* அவசர நிமித்தமாக பதிவு செய்ய விரும்பும் பொதுமக்களின் வசதிக்காக ஆவணப்பதிவிற்கான முன்பதிவு டோக்கன் வழங்குவதில் ‘தட்கல்’ முறை அறிமுகப்படுத்தப்படும். இதற்காக, 100 சார்பதிவாளர் அலுவலகங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு இத்திட்டம் செயல்படுத்தப்படும். ஒரு அவசர முன்பதிவு டோக்கனுக்கு ரூ.5 ஆயிரம் கட்டணமாக விதிக்கப்படும்.
* அலுவலகங்களில் பணியாற்றும் பொதுமக்களின் வசதிக்காக விடுமுறை நாளன்று பதிவுப் பணியை மேற்கொள்ளும் வகையில் சார்-பதிவாளர் அலுவலகங்கள் சனிக்கிழமைகளிலும் செயல்படும். இதற்கு கட்டணமாக ரூ.1000 வசூலிக்கப்படும். அரசு நிலங்கள் பதிவு செய்வதை தடுக்க ‘ஸ்டார்’ மென்பொருள் பயன்படுத்தப்படும்.ஆவண எழுத்தர் உரிமங்கள் புதிதாக வழங்கப்படும். பொறியியல் பட்டதாரிகளுக்கு ‘களப்பணி மேற்பார்வையாளர் உரிமம்’ வழங்கும் திட்டம் அறிமுகப்படுத்தப்படும். சென்னை பதிவு மண்டலம் பிரிக்கப்பட்டு 2 மண்டலங்கள் உருவாக்கப்படும். சென்னை (வடக்கு) மற்றும் சென்னை (தெற்கு) என இரு பதிவு மண்டலங்களாக பிரிக்கப்படும்.
* சென்னை மண்டலத்தில் தாம்பரத்தை தலைமையிடமாகக் கொண்டு கூடுதலாக ஒரு பதிவு மாவட்டம் உருவாக்கப்படும்.

* பேரவையில் இன்று...
தமிழக சட்டப்பேரவை இன்று காலை 10 மணிக்கு கூடியதும், கேள்வி-பதில் நேரம் எடுத்துக் கொள்ளப்படும். இதையடுத்து மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை மானிய கோரிக்கை மீது விவாதம் நடைபெறும். இந்த விவாதத்தில் ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பேசுவார்கள். இறுதியில், விவாதத்துக்கு பதில் அளித்து மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்த்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பதில் அளித்து பேசி, துறைக்கான முக்கிய அறிவிப்புகளை வெளியிடுவார்.

Tags : SAR-Registrar Offices , Char-Registrar's Offices will also be open on Saturdays for the implementation of the new scheme 'My Invoice-My Rights'.
× RELATED கிண்டி கத்திப்பாரா சந்திப்பில் விமான...