ஜவுளி நகரம் அமைப்பதற்கான ஆய்வு சென்னையில் சர்வதேச தரத்தில் வடிவமைப்பு நிலையம்: அமைச்சர் ஆர்.காந்தி அறிவிப்பு

சென்னை: பேரவையில் கைத்தறி, கைத்திறன், துணி நூல் மற்றும் கதர் துறை தொடர்பான புதிய அறிவிப்புகளை வெளியிட்டு, அத்துறையின் அமைச்சர் ஆர்.காந்தி பேசியதாவது: தேசிய ஆடை அலங்கார தொழில்நுட்ப நிறுவனம் (நிப்ட்) சென்னை மற்றும் பெங்களூரு மூலமாக 500 புதிய டிசைன்கள் உருவாக்கப்படும். ரூ.50 லட்சம் செலவில் தேசிய வடிவமைப்பு நிறுவனம் (என்.ஐ.டி.), அகமதாபாத் மூலம் கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கங்களின் 50 வடிவமைப்பாளர்களுக்கு திறன் மேம்பாடு பயிற்சி வழங்கப்படும். காஞ்சிபுரத்தில் உள்ள தமிழ்நாடு சரிகை ஆலையின் உட்கட்டமைப்புகள் ரூ.2.50 கோடி மதிப்பீட்டில் புனரமைப்பு செய்யப்பட்டு உற்பத்தி திறன் அதிகரிக்கப்படும். கலாசார பாரம்பரியத்தை பாதுகாக்கும் வகையில், தமிழ்நாடு கைத்தறி அங்கீகார அமைப்பு ரூ.1 கோடி செலவில் புதிதாக ஏற்படுத்தப்படும்.

ரூ.10 கோடி செலவில் சென்னையில் சர்வதேச தரத்தில் வடிவமைப்பு நிலையம் உருவாக்கப்படும். ரூ.10 கோடி செலவில் தமிழ்நாட்டில் உள்ள கைத்தறி மற்றும் விசைத்தறிகளை கணக்கெடுத்து புவிசார் மூலம் அடையாளப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். ‘ஹேண்ட்லூம்ஸ் ஆப் இந்தியா’ என்ற பெயரில் கைத்தறி விற்பனை இணைவு அங்காடி ரூ.10 கோடி மதிப்பில் ஏற்படுத்தப்படும். கைத்தறி தயாரிப்புகள் மின்னணுமயமாக்கி ஆவணப்படுத்தப்படும். ரூ.1 கோடி செலவில் சென்னையில் ஜவுளி நகரம் அமைப்பதற்கான சாத்தியக் கூறு ஆய்வு மற்றும் விரிவான செயல்திட்டம் தயாரிக்கப்படும். சர்வதேச ஜவுளி கண்காட்சிகளில் தமிழகத்துக்கு என தனி அரங்கு அமைத்து அதில் தமிழக ஜவுளித் துறை சார்ந்த நிறுவனங்கள் கலந்துகொள்ள வாய்ப்புகள் ஏற்படுத்தப்படும். தமிழ்நாட்டில் ஜவுளித் துறையின் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஆலோசனைகள் வழங்க தொழில்நுட்ப ஆலோசனை குழு அமைக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

* காஞ்சியில் வாடிக்கையாளர் விரும்பும் டிசைனில் சேலைகள்

சென்னை: கதர் மற்றும் கிராமத் தொழில்கள், கைத்தறி, கைத்திறன், துணிநூல் மற்றும் கதர்த்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்துக்கு அமைச்சர் ஆர்.காந்தி பதிலளித்து பேசியதாவது: கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கங்களுக்கு தள்ளுபடி மானியம் ரூ.310 கோடி வழங்கப்பட்டுள்ளது. நெசவாளர்களின் இலவச வேஷ்டி, சேலை உற்பத்தி பணிகளுக்கான முந்தைய கூலி உயர்த்தப்பட்டுள்ளது. வாடிக்கையாளர்களின் விருப்பத்திற்கு ஏற்ப சேலைகளை வடிவமைக்கும் வசதி, ரூ.10 லட்சம் செலவில் காஞ்சிபுரம் அண்ணா பட்டு கைத்தறி கூட்டுறவு நெசவாளர் சங்கத்தில் தொடங்கப்பட்டுள்ளது. சிறந்த நெசவாளர்களுக்கான பரிசுத் தொகை உயர்த்தப்பட்டுள்ளது. 1 சதவீத செஸ் வரி குறைக்கப்பட்டது. இவ்வாறு அவர் பேசினார்.

Related Stories: