இரவு பகலாக தீயை அணைக்கும் பணி தீவிரம் 2வது நாளாக எரியும் பெருங்குடி குப்பைக் கிடங்கு: பல கி.மீ. சுற்றளவுக்கு கரும்புகை சூழ்ந்தது; ஆயிரக்கணக்கான குடும்பத்தினர் தவிப்பு

சென்னை: பெருங்குடி குப்பை  கிடங்கில் 2வது நாளாக பற்றி எரியும் தீயை  அணைக்கும் பணியில் தீயணைப்பு வீரர்கள் உள்பட 500க்கும் மேற்பட்டோர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். தீ விபத்து காரணமாக, குப்பை கிடங்கை சுற்றிலும் பல கி.மீ தூரம் புகைமண்டலம் சூழ்ந்ததால் ஆயிரக்கணக்கான குடும்பத்தினர் மற்றும் ஐ.டி. கம்பெனி ஊழியர்கள் கடும் பாதிப்புக்குள்ளாகி உள்ளனர். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் சேரும் குப்பை கழிவுகள் லாரிகள் மூலம் கொண்டு வரப்பட்டு துரைப்பாக்கம் 200 ரேடியல் சாலையில் உள்ள நூற்றுக்கணக்கான ஏக்கரில் பரந்து விரிந்து கிடக்கும் பெருங்குடி குப்பை கிடங்கில் கொட்டுகின்றனர்.

இதிலிருந்து இரும்பு, பிளாஸ்டிக், பித்தளை உள்ளிட்ட பொருட்கள் கிடைப்பதால் 50க்கும் மேற்பட்ட தனி நபர்கள் பிழைப்பு தேடி இங்கு வருகின்றனர். மேலும், மாநகராட்சி சார்பில் குப்பையிலிருந்து கட்டிட இடிபாடுகள், தேங்காய் மட்டைகள், மணல் என பொருட்களை இயந்திரம் மூலம் தரம் பிரித்து, எடுத்து விற்பனை செய்கின்றனர். இங்கு கொட்டப்படும் கழிவுகளிலிருந்து உரம் தயாரித்து விற்பனையும் செய்யப்படுகிறது. இந்நிலையில், நேற்று முன்தினம் பெருங்குடி குப்பை கிடங்கில் திடீரென தீப்பற்றியது. அங்கு கொட்டப்பட்டிருந்த தேங்காய் நார் போன்ற காய்ந்த குப்பையால் தீ மளமளவென எரியத் தொடங்கியது. இதனால், துரைப்பாக்கத்திலிருந்து பல்லாவரம் செல்லும் 200 அடி சாலை, வேளச்சேரி பள்ளிக்கரணை சாலை மற்றும் துரைப்பாக்கம் சுற்றுவட்டாரத்தில் கடும் புகை மூட்டம் சூழ்ந்தது. அவ்வழியே செல்லும் வாகன ஓட்டிகள் மற்றும் சுற்றுப்புற பகுதியில் வசிப்பவர்கள், ஐ.டி. நிறுவனங்களின் ஆயிரக்கணக்கான ஊழியர்கள் கண் எரிச்சல், மூச்சு திணறல் என பெரிதும் அவதிக்குள்ளாகினர்.

தகவலறிந்ததும் துரைப்பாக்கம் தீயணைப்பு நிலைய வீரர்கள் ஒரு வாகனத்தில் வந்து தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். இங்கு குப்பை கழிவுகளை மைனிங் முறையில் பிளாஸ்டிக் தனியாகவும், கட்டிட கழிவுகள் தனியாகவும் பிரிக்கும் இயந்திரம் பகுதியில் தீ பற்றி எரிவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. துரைப்பாக்கம் போலீசாரும் வழக்கு பதிவு செய்து விபத்துக்கான காரணம் குறித்து விசாரித்து வருகின்றனர். இந்நிலையில் பெருங்குடி குப்பை கிடங்கில் 2வது நாளாக தீயை அணைக்கும் பணி நேற்று தொடர்ந்தது. இதனால்  குப்பை கிடங்கை சுற்றி இருக்கும் பகுதிகள் முழுவதும் புகை மண்டலமாக  காட்சியளித்தது. குப்பையில் நெகிழிப் பொருட்களும் சேர்ந்து எரிவதால் சுவாசக் கோளாறு ஏற்படும் அபாயம் உள்ளது. குறிப்பாக, வேளச்சேரி குடியிருப்பு பகுதிகள்,  ராஜிவ் காந்தி சாலை உள்ளிட்ட பகுதிகளிலும் புகை மண்டலமாக  காணப்படுகிறது.

சுமார் 135 தீயணைப்புத் துறையினர் மற்றும் குப்பை  கிடங்கில் பணியாற்றும் 500க்கும் மேற்பட்ட ஊழியர்கள் தீயை அணைக்கும்  பணியில் ஈடுபட்டுள்ளனர். குப்பை கிடங்கில் பற்றி எரியும் தீயை  கட்டுப்படுத்த இன்னும் மூன்று நாட்களுக்கு மேல் ஆகும் என  தீயணைப்புத் துறையினர் தெரிவித்தனர். இதற்கிடையே, பெருங்குடி குப்பை கிடங்கு தீ விபத்தை நகராட்சித் துறை அமைச்சர் கே.என்.நேரு ஆய்வு செய்தார். அப்போது,  சென்னை மேயர் பிரியா, எம்பி தமிழச்சி தங்கபாண்டியன்,  சோழிங்கநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் அரவிந்த் ரமேஷ், துணை மேயர் மகேஷ்  குமார், மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி உள்ளிட்ட முக்கிய  அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

பின்னர், நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு கூறியதாவது: சென்னை மாநகராட்சியின் 9 முதல் 15 மண்டலங்களில் சேகரிக்கப்படும் குப்பை மறு சுழற்சிக்கு உட்படுத்தப்பட்டு எஞ்சிய குப்பை இங்கு சேகரிக்கப்படுகிறது. இதுமட்டுமல்லாமல், 25 ஆண்டுகளாக குப்பை கொட்டப்படுகிறது. இந்த குப்பை கொட்டும் வளாகத்தில் உள்ள திடக்கழிவுகள் தற்போது பையோ மைனிங் முறையில் பிரிக்கப்பட்டு வருகிறது. இந்த பணிகள் 2 ஆண்டுகளில் நிறைவடையும். நேற்று முன்தினத்திலிருந்து பெருங்குடி குப்பைக் கொட்டும் வளாகத்தில் தீப்பற்றி எரிகிறது. உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு தீயணைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

சென்னை மாநகராட்சி, தீயணைப்புத் துறை மற்றும் சென்னை குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்றும் 300க்கும் மேற்பட்ட பணியாளர்கள் தீயை அணைக்கும் பணியில் இரண்டு நாளாக இரவு பகல் பாராமல் ஈடுபட்டு வருகின்றனர். தீயணைப்புத்துறையின் சார்பில் 12 வாகனங்கள், 2 ஸ்கை லிப்ட் வாகனங்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. மேலும் சென்னை மாநகராட்சியின் சார்பில் 120க்கும் மேற்பட்ட டேங்கர் லாரிகளில் தண்ணீர் கொண்டு வரப்பட்டது. இதன் காரணமாக தீ கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. தற்போது தீயின் காரணமாக புகை மூட்டம் காணப்படுகிறது. இந்த பகுதியில் உள்ள பொதுமக்களுக்கு ஏற்படும் சிரமங்களை தவிர்க்க பெருங்குடி, வேளச்சேரி, மடிப்பாக்கம், தரமணி ஆகிய 4 இடங்களில் மருத்துவ முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளது. தேவைக்கேற்ப முகாம்கள் அதிகரிக்கப்படும்.

இவ்வாறு அமைச்சர் கூறினார்.

துணை மேயர் மகேஷ்குமார் கூறுகையில், ‘‘சென்னை மாநகராட்சி நிர்வாகம் தீயணைப்பு துறையுடன் இணைந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறது. தீ மேலும் பரவாமல் கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. எதிர்காலத்தில் இதுபோன்று நடக்காமல் வளாகத்தில் தீயணைப்பு வளாகம் அமைக்கப்படும்’’ என்றார்.

* 35 ஆண்டுகளுக்கு மேலாக பயன்பாடு

பெருங்குடி குப்பை கிடங்கில் கழிவுகளின் அளவு சுமார் 30.63 லட்சம் கன மீட்டர். 225.16 ஏக்கர் பரப்பளவில் இந்த வளாகம் கடந்த 35 ஆண்டுகளுக்கும் மேலாக பயன்பாட்டில் உள்ளது. பெருங்குடி குப்பை கொட்டும் வளாகம் நகரின் தெற்கு பகுதியில் உள்ளது. இதில் 9 முதல் 15 மண்டலங்களில் சேகரிக்கப்படும் திடக்கழிவுகள் கொட்டப்படுகிறது. தரைமட்டத்திற்கு மேலே உள்ள பழைய குப்பை கழிவுகளின் அளவு சுமார் 30.63 லட்சம் கன மீட்டர் என கணக்கீடு செய்யப்பட்டுள்ளது. சென்னை மாநகராட்சி பெருங்குடி குப்பை கொட்டும் வளாக நிலப்பரப்பை உயிரியல் அகழ்ந்தெடுத்தல் பையோ மைனிங் முறையில் மீட்டெடுக்க ரூ.350.65 கோடி திட்ட மதிப்பீட்டிற்கு தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் ஒப்புதல் வழங்கப்பட்டது. குப்பை கொட்டும் வளாகத்தில் குவிந்துள்ள திடக்கழிவுகளை அகழ்ந்தெடுத்து பொருட்களை பிரித்தெடுத்தல் மற்றும் சீரமைத்தல் பணிகள் தொடங்கப்பட்டு மூன்று ஆண்டு காலத்தில் திட்டம் நிறைவுபெறும். இந்த திட்டமானது கலைஞரின் கனவு திட்டமாகும்.

Related Stories: