×

உலக நாடுகளை அதிர வைத்த இந்தோனேசியா பாமாயில் பயங்கரம்: இந்தியாவுக்கு தான் அதிக பாதிப்பு; எட்டாக்கனியாகும் ‘ஏழைகள் நெய்’

ரஷ்யா- உக்ரைன் போர் 2 நாடுகளுக்கு இடையே நடப்பதாக கருதப்பட்டாலும், அது உலகத்துடன் நடக்கும் போராகவே நாளுக்கு நாள் மாறிக் கொண்டிருக்கிறது. 3வது உலகப் போராக வெடிக்குமா? என்ற அச்சம் ஒருபுறம். அத்தியாவசியப் பொருட்களின் விலைவாசி எங்கே போய் நிற்குமோ? என்ற பீதி மறுபுறம். இந்த போரால் உலகம் முழுவதும் உணவு பொருட்களின் விலைகள் உட்பட, அனைத்து பொருட்களின் விலையும் தாறுமாறாக உயர்ந்து கொண்டிருக்கிறது. குறிப்பாக, சமையல் எண்ணெய் விலை உயர்வுதான், இல்லத்தரசிகளின் தினசரி புலம்பலாக மாறி இருக்கிறது. ‘2 மாசத்துக்கு முன்னாடி கூட லிட்டர் எண்ணெய் ரூ.120க்கு தானே வித்தது... இப்போது, 200 ஆகி விட்டதே...’ என்கின்றனர். ஏனென்றால், அது அவர்களின் கவலை. காரணம், குடும்பத்தை வழி நடத்தி செல்லும் குடும்பத் தலைவி. இவர்களின் புலம்பலிலும், ஒவ்வொரு நாட்டின் பொருளாதார பாதிப்புக்கும் எரியும் நெருப்பில் எண்ணெய் ஊற்றி இருக்கிறது இந்தோனேசியா. காரணம் என்ன...? பாமாயில்... இதை, ‘ஏழைகளின் நெய்’ என்றும் அழைப்பார்கள்.  

சமையலுக்கு அத்தியாவசியமான உபபொருள் எண்ணெய். முன்பெல்லாம் செக்கில் ஆட்டிய எண்ணெயை தான் மக்கள் அதிகம் பயன்படுத்தி வந்தனர். ஆனால், விலை குறைவாக கிடைக்கிறது என்று பாமாயிலை மக்கள் அதிகம் உபயோகிக்க தொடங்கி விட்டனர். ஓட்டல்கள், சாலையோர நடைபாதை கடைகள் என அனைத்திலும் இதனை பயன்படுத்துவதால் நம்நாட்டில் பாமாயிலுக்கு அதிக கிராக்கி உள்ளது. ரஷ்யா உக்ரைன் இடையே கடந்த பிப்.24ம் தேதி போர் ஏற்பட்டது. உக்ரைன் போருக்கு பின்னர், பாமாயிலுக்கு தற்போது கடும் கிராக்கி ஏற்பட்டுள்ளது.

உலகிலேயே பாமாயிலை அதிகளவு இறக்குமதி செய்யும் நாடுகளில் இந்தியா முதலிடம் வகிக்கிறது. பாமாயிலுக்கு இந்தோனேசியா, மலேசியா போன்ற நாடுகளை நமது நாடு நம்பி உள்ளது. ஒவ்வொரு ஆண்டும் 1 கோடியே 30 லட்சம் டன் பாமாயிலை இந்தியா இறக்குமதி செய்கிறது. இது உலகளவில் 63 சதவீதமாகும். 45 சதவீதம் இந்தோனேசியா தருகிறது. மீதி மலேசியாவில் இருந்து வருகிறது. இந்தோனேசியாவில் இருந்து ஆண்டுதோறும் 40 லட்சம் டன் இறக்குமதி செய்யப்படுகிறது.

பாமாயிலுக்கு அடுத்தபடியாக சூரியகாந்தி எண்ணைய் பயன்பாடும் பல நாடுகளில் அதிகமாக உள்ளது. உலகின் மொத்த உற்பத்தியில் 53 சதவீத சூரியகாந்தி எண்ணெய் ரஷ்யா, உக்ரைன் நாடுகளில் இருந்துதான் வருகின்றன.  உக்ரைன்-ரஷ்யா இடையேயான போர் தற்போது தீவிரமடைந்துள்ளது. உக்ரைனில் உள்ள முக்கிய நகரங்களை ரஷ்யா குண்டுவீசி தாக்கி அழித்து விட்டது. ரஷ்யாவின் தாக்குதலையடுத்து ஒரு கோடிக்கும் மேலான உக்ரைனியர்கள் போலந்து, ரோமேனியா, பெலாரஸ், ஸ்லோவேகியா உள்ளிட்ட நாடுகளில் தஞ்சம் அடைந்துள்ளனர். இதனால், விவசாயம் பாதித்துள்ளது.

உக்ரைன், ரஷ்யாவில் இருந்து சூரியகாந்தி (சன்பிளவர்) எண்ணைய் வரத்து முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக சூரியகாந்தி எண்ணைய் விலை சில மாதங்களுக்கு முன்பு வரை இருந்ததை விட ரூ.80 முதல் ரூ.150 வரை அதிகரித்துள்ளது. இதனால் நடுத்தர ஏழைமக்கள் சன்பிளவர் எண்ணெய் தட்டுப்பாட்டினால் அதிகம் பேர் பாமாயிலை பயன்படுத்துவதற்கு துவங்கி உள்ளனர். இப்போது இந்தியாவை போல் பல்வேறு நாடுகளும் பாமாயிலை கேட்டு இந்தோனேசியாவிடம் தொடர்ந்து வேண்டுகோள் விடுத்துள்ளன. இதனால் பாமாயில் வினியோகத்தில் இந்தோனேசியாவுக்கு கடும் பிரச்னைகள் ஏற்பட்டுள்ளன. உள்நாட்டில் ஏற்பட்டுள்ள உற்பத்தி பற்றாக்குறை, விலை உயர்வு போன்ற காரணங்களால் ஏப்ரல் 28ம் தேதி முதல் பாமாயில் ஏற்றுமதியை நிறுத்துவதாக இந்தோனேசியா அறிவித்தது.

அதன்படி, நேற்று முதல் இதன் ஏற்றுமதி நிறுத்தப்பட்டது. இந்தோனேசியாவின் இம்முடிவு காரணமாக இந்தியா உள்ளிட்ட பல நாடுகளின் நுகர்வோர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். உக்ரைன் போர் உள்ளிட்ட பிரச்னைகளால் இன்று சமையல் எண்ணெயில் அதிக  விலைக்கு விற்கப்படுவது பாமாயிலாகும், ஒரு டன் பாமாயில் விலை ரூ.1 லட்சத்து 47 ஆயிரம். சில மாதங்களுக்கு முன் ஒரு லிட்டர் பாமாயில் ரூ.125க்கு விற்றது. தற்போது இதன் விலை பிராண்ட்களை பொறுத்து லிட்டருக்கு ரூ.200 வரை விற்கப்படுகிறது. இந்தோனேசியாவின் இந்த நடவடிக்கை மற்ற நாடுகளை ஓரளவு பாதிக்கலாம், ஆனால், இது இந்தியாவை மிக மோசமாக பாதிக்கும். இந்த நெருக்கடியைச் சமாளிக்க இந்தியா தனது ராஜ்ய வழிகளை செயல்படுத்த வேண்டும் என்று வர்த்தகர்கள் தெரிவித்தனர்.

* செம்பனை பல ரகம்
இந்தோனேசியாவில் ‘செம்பனை எண்ணெய்’ என அழைக்கப்படும் ‘பாமாயில்’, செம்பனை அல்லது எண்ணெய் பனை எனப்படும் ஒரு விதைப்பனை மரத்தின் பழங்களில் இருந்து எடுக்கப்படுகிறது. 2 பனை இனங்களில் இருந்து பாமாயில் கிடைக்கிறது. ஆப்பிரிக்காவின் பாமாயில் என்பது, ‘எலியிஸ் குயினென்சிஸ்’ என்கிற இனத்தில் இருந்து எடுக்கப்படுகிறது. இதை, 2 ஆப்ரிக்கன் எண்ணெய் பனை’ என்கின்றனர். மற்றொன்று, ‘அமெரிக்கன் பாமாயில்’. இது, ‘எலியிஸ் ஒலிபெரா’ என்ற இனத்தில் இருந்து எடுக்கப்படுகிறது. இது தவிர, ‘மாரிபா பனை’ என்ற மரத்திலில் இருந்தும் பாமாயில் எடுக்கப்படுகிறது . இந்த எண்ணெய் சிவந்த நிறத்தில் இருக்கும். இப்பனை மரங்கள் இந்தோனேசியா, மலேசியா, நைஜிரியா நாடுகளில் பெருமளவு வளர்க்கப்படுகிறது. இதை வளர்ப்பது மக்களுக்கு பெரிய வேலைவாய்ப்பாக கருதப்பட்டாலும், இவை பயிரிடப்படும் நாடுகளில் காடுகள் அழிப்புக்கு இது முக்கிய காரணமாகக் கூறப்படுகிறது.

* ஆண்டுக்கு ரூ.50,000 கோடி
இந்தியா ஒவ்வொரு ஆண்டும் 1 கோடியே 30 லட்சம் டன் சமையல் எண்ணெயை இறக்குமதி செய்கிறது. அதன் பெரும்பகுதி இந்தோனேசியாவிலிருந்து வாங்கப்படுகிறது. அதே நேரத்தில் மலேசியா, தாய்லாந்தும் குறைந்த அளவு பாமாயிலை இந்தியாவிற்கு விற்கின்றன. இந்தியாவின் மொத்த எண்ணெய் தேவையின் 65 சதவிகிதத்தை இந்திய அரசு இறக்குமதி செய்கிறது. 35 சதவிகிம் உள்நாட்டிலேயே உற்பத்தி ஆகிறது. இந்த 65 சதவிகித எண்ணெயில் 60 சதவிகிதம் பாமாயில். பிற எண்ணெய்களுடன் இது கலக்கப்படுகிறது. பாமாயில் இறக்குமதிக்காக ஒன்றிய அரசு ஆண்டுக்கு ரூ.50,000 கோடி செலவிடுகிறது.

இதெல்லாம் இதன் மகிமை
* பாமாயிலில் பால்மிட்டிக் அமிலம்  உள்ளது. ஆகவேதான், இதற்குப் பாமாயில் என பெயர் வந்தது.
* இந்த எண்ணெயில் அதிக கரோட்டின், அல்பா கரோட்டின், பீட்டா கரோட்டின், லைகோபீன், கொழுப்பு அமிலங்கள், கிளைசரால் போன்றவை உள்ளன. அதிக கொழுப்புச் சத்தும் இருக்கிறது.
* இதில், 10 சதவீதம் லினோலியிக் அமிலம் இருப்பதால் கரோட்டின் அதிகமாக உள்ளது. இது, வைட்டமின் ‘ஏ’ குறைபாட்டினால் ஏற்படும் நோயை தடுக்கிறது.
* 100 கிராம் எண்ணெயில் 884 கிலோ கலோரி சக்தி அடங்கியுள்ளது.

* சோப்பு முதல் சாக்லெட் வரை...
சமையலுக்கு மட்டுமின்றி, தொழிற்துறையிலும் பாமாயில் மிக அதிகளவில் பயன்படுத்தப்படுகிறது. இது, வாசனையற்றது. எனவேதான், நாள் கணக்கில் வைத்து விற்கப்படும் பொருட்களை தயாரிக்க இவை அதிகமாக பயன்படுத்தப்படுகிறது. மேலும், பொருளாதார ரீதியாக இதன் விலையும் குறைவு. எனவே, தொழிற்துறையினர் இதை விரும்பி பயன்படுத்துகின்றனர். சோப்பு, சாக்லெட், மருந்து, வாசனைப் பொருட்கள், ஐஸ்கிரீம், செயற்கை வெண்ணெய் கொழுப்பு, இனிப்பு வகைகள் தயாரிக்க இது பயன்படுகிறது. இதன் புண்ணாக்கு மாட்டுத் தீவனமாகிறது. பாமாயிலில் இருந்து மெத்தனால், பயோடீசலும் தயாரிக்கப்படுகிறது.

* ஹெக்டேருக்கு 6,000 லிட்டர்
பாமாயில் பனையில் இருந்து ஒரு ஹெக்டேரில் ஆண்டுக்கு 4-6 டன் எண்ணெய் எடுக்கப்படுகிறது. மற்ற எண்ணெய் வித்துகளை விட பல மடங்கு எண்ணெய் தருகிறது. ஒரே ஹேக்டரில் எவை எவ்வளவு எண்ணெய் தருகிறது என்பதற்கான ஒரு ஒப்பீடு இதோ...

நிலக்கடலை    375 கிலோ
கடுகு    560 கிலோ
சூரியகாந்தி    545 கிலோ
எள்    100 கிலோ
தேங்காய்    970 கிலோ
செம்பனை    4000-6000 கிலோ
* 2016ம் ஆண்டில் உலகின் மொத்த பாமாயில் எண்ணெய் உற்பத்தி 6 கோடியே 26 லட்சம் டன்களாக இருந்தது.

Tags : Indonesia ,India , Terror in Indonesia palm oil that shook the world: India is the most affected; ‘Poor ghee’ which is octagonal
× RELATED இந்தோனேசியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: மக்கள் பதற்றம்!