×

ராஜ்யத்தை விரிவுப்படுத்தும் மகாராஜா சிறு விமான நிறுவனங்களை வளைத்து போடும் டாடா: ஏர் ஏசியாவை வாங்க விண்ணப்பம்

புதுடெல்லி: அரசுக்கு சொந்தமான நாட்டின் மிகப்பெரிய விமான நிறுவனமாக விளங்கிய ஏர் -இந்தியா பெரும் நஷ்டத்தில் இயங்கியது. இதனால், இதை ரூ.18 ஆயிரம் கோடிக்கு ஒன்றிய அரசு விற்றது. டாடா குழுமத்தை சேர்ந்த டாடா சன்ஸ் நிறுவனம் இதை கடந்த ஜனவரி 17ம் தேதி வாங்கியது. இந்நிலையில், விமானத்துறையில் தன்னை மேலும் பலப்படுத்தும் முயற்சியில் டாடா சன்ஸ் இறங்கியுள்ளது. இதன் ஒரு கட்டமாக, நஷ்டத்தில் இயங்கும் சிறிய விமான நிறுவனங்களை வாங்கி, ஏர் இந்தியாவின் ராஜ்யத்தை விரிவுப்படுத்துகிறது. இதன் வலையில் முதலில் சிக்கி இருக்கிறது ‘ஏர் ஏசியா இந்தியா’ விமான நிறுவனம்.

மலேசியாவை சேர்ந்த ஏர் ஏசியா நிறுவனம், இந்தியாவில் ‘ஏர் ஏசியா இந்தியா’ என்ற பெயரில் 16.33 சதவீத பங்குடன் (ரூ.139 கோடி மதிப்பு), கடந்த 2014 முதல் உள்நாட்டு விமானச்சேவையில் ஈடுபட்டு வருகிறது. குறைந்த கட்டணத்தில் நிறைவான சேவை என்ற தாரக மந்திரத்துடன் செயல்பட்டு வரும் இதன் வர்த்தகம், கடும் போட்டியின் காரணமாக எடுபடவில்லை. எனவே, நஷ்டத்தில் வண்டி ஓடிக் கொண்டிருக்கிறது. இதை விற்பதற்கான முயற்சியில் ஏர் ஏசியா ஈடுபட்டுள்ளது.  

‘இந்திய போட்டி ஆணையம்’ மூலமாக, இதை விற்க விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. இதை வாங்குவதற்கு டாடா சன்ஸ் விண்ணப்பித்து இருக்கிறது. இதைத் தொடர்ந்து, சிங்கப்பூர் ஏர்லைன்சுடன் இணைந்து இந்தியாவில் 25 சதவீத பங்குடன் நடத்தப்படும் விஸ்தாரா விமான நிறுவனம், 54 சதவீத பங்குடன் செயல்படும் இண்டிகோ. ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் ஆகிய விமான நிறுவனங்களையும் வாங்குவதற்கு டாடா சன்ஸ் நிறுவனம் முயற்சி மேற்கொண்டுள்ளது. இதன்மூலம், விமானத் துறையில் மிகப்பெரிய சாம்ராஜ்யத்தை அது உருவாக்க உள்ளது.

* கடந்த 2014 முதல் இந்தியாவின் உள்நாட்டு விமான சேவையில் ஈடுபட்டு வந்தாலும், இதுவரையில் வெளிநாடுகளுக்கு ஏர் ஏசியா இந்தியா நிறுவனம் விமானங்களை இயக்கவில்லை.
* அடுத்த ஒரு சில ஆண்டுகளில் இந்தியாவின் மிகப்பெரிய விமான போக்குவரத்து நிறுவனமாக ஏர் இந்தியாவை மாற்ற உள்ள டாடா சன்ஸ், டெல்லிக்கு அருகே உள்ள குருகிராமில் 70 ஆயிரம் சதுரடியில் மிகப்பெரிய தலைமை அலுவலகத்தை அமைக்க உள்ளது.

Tags : Maharaja ,Tata ,Air Asia , Tata to bend Air Asia to expand small airlines: Application to buy Air Asia
× RELATED ஆனந்த வாழ்வருளும் ஆறுவிரல் பாத தரிசனம்