×

அந்தியூர் அருகே அடர்ந்த வனத்தில் காட்டு யானை வழிமறித்ததால் ஆம்புலன்சில் பெண்ணுக்கு பிரசவம்

அந்தியூர்: அந்தியூர் அருகே அடர்ந்த வனத்தில் காட்டு யானை வழிமறித்து நின்றதால், ஆம்புலன்சில் பெண்ணுக்கு பிரசவம் பார்க்கப்பட்டது. ஈரோடு மாவட்டம், அந்தியூர் அருகே தேவர்மலையை சேர்ந்தவர் சிவராமன். இவரது மனைவி சிவம்மாள் (24). நிறைமாத கர்ப்பிணியான இவருக்கு நேற்று முன்தினம் இரவு பிரசவ வலி ஏற்பட்டது. உடனடியாக 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள், சிவம்மாள் மற்றும் அவரது உறவினர்களை ஏற்றிக்கொண்டு பர்கூர் ஆரம்ப சுகாதார நிலையம் சென்று கொண்டிருந்தனர். தாமரைக்கரை அடுத்த பசுவேஸ்வரர் கோயில் பகுதியில் ஆம்புலன்ஸ் வந்தபோது சிவம்மாள், பிரசவ வலியால் துடித்தார்.

இதனால் ஆம்புலன்ஸ் ஊழியர்கள், வனப்பகுதியில் ரோட்டோரம் நிறுத்தினர். அவசர கால மருத்துவ நிபுணர் சிவா பிரசவம் பார்த்தார். அப்போது சிவம்மாளுக்கு அழகிய ஆண் குழந்தை பிறந்தது. பிரசவம் நடந்து கொண்டிருந்தபோது 500 மீட்டர் தொலைவில் சுண்டப்பூர் பிரிவில் பெண் யானை ஒன்று ரோட்டில் உலா வருவதாக அந்த வழியாக வாகனங்களில் சென்றவர்கள் தெரிவித்தனர். இதனால், அதிர்ச்சி அடைந்த ஊழியர்கள் விரைவாக பிரசவத்தை முடித்து சிவம்மாளை பர்கூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அழைத்து சென்றனர்.

வழியில் காட்டு யானை அதே இடத்தில் நின்று உணவு சாப்பிட்டுக் கொண்டிருந்தது. இதனால் 30 நிமிடங்கள் காத்திருந்து, யானை அடர்ந்த வனப்பகுதிக்குள் சென்றதும் ஆரம்ப சுகாதார மையத்திற்கு சென்று தாய் மற்றும் குழந்தையை அனுமதித்தனர். அங்கு அவர்கள் நலமுடன் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். அடர்ந்த வனப்பகுதியில் 500 மீட்டர் தூரத்தில் யானை இருந்தும், பதற்றம் அடையாமல் பிரசவம் பார்த்து மருத்துவமனையில் தாயையும், சேயையும் பத்திரமாக சேர்த்த மருத்துவ நிபுணர் சிவா மற்றும் டிரைவர் ஆனந்தை அதிகாரிகள் பாராட்டினர்.

Tags : Anthiyur , A woman gives birth in an ambulance after a wild elephant strayed into a dense forest near Anthiyur
× RELATED சட்டவிரோத மது விற்பனை; 11 பேர் கைது