மாற்றுத்திறனாளி நலத்துறையில் போலி அடையாள அட்டைகள் கண்டறிந்து ரத்து செய்யப்படும்: வேலூரில் ஆணையர் பேட்டி

வேலூர்: வேலூர் மாவட்டம் காட்பாடியில் உள்ள மாவட்ட விளையாட்டு மைதானத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான விளையாட்டு போட்டிகள் நேற்று நடந்தது. போட்டியை தமிழ்நாடு மாற்றுத்திறனாளிகள் நலத்துறை ஆணையர் ஜான் டாம் வர்கீஸ் தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். கலெக்டர் குமாரவேல் பாண்டியன் முன்னிலை வகித்தார். 300க்கும் மேற்பட்ட மாற்றுதிறனாளிகள் பங்கேற்றனர். பின்னர் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை ஆணையர் ஜான் டாம் வர்கீஸ் அளித்த பேட்டி: மாற்றுத்திறனாளர்களுக்கு வழங்கப்பட்ட அடையாள அட்டையில் போலி அடையாள அட்டைகள் உள்ளது. இதில் குறிப்பாக வேலூர் மாவட்டத்தில் அதிக போலி அட்டைகள் உள்ளது கண்டறியப்பட்டுள்ளது. இம்மாவட்டத்தில் தனி குழு அமைத்து வீடு, வீடாக மாற்றுத்திறனாளிகளை ஆய்வு செய்து வருகிறோம்.

இதன் மூலம் போலி அடையாள அட்டைகள் கண்டறியப்பட்டு அவைகள் ரத்து செய்யப்படும். மேலும் அடையாள அட்டை நேரடியாக மாற்றுத்திறனாளர்களின் வீடுகளுக்கே வழங்கப்படுவதிலும் சில பிரச்னைகள் உள்ளது. ஒன்றிய அரசே நேரடியாக அடையாள அட்டைகளை தபால் மூலம் அனுப்புகிறது. இதுவரை தமிழகத்திற்கு 7 லட்சம் ஸ்மார்ட் கார்டை ஒன்றிய அரசு அனுப்பியுள்ளது. மீதம் ஒரு லட்சம் மாற்றுத்திறனாளிகள் அடையாள அட்டை வர வேண்டியுள்ளது. ஒன்றிய அரசு தபால் மூலம் அனுப்புவதற்காக ஒதுக்கிய ரூ.9 கோடி முறைகேடு என கூறுகின்றனர். அவ்வாறு ஒன்றிய அரசு தமிழக அரசுக்கு நிதி ஒதுக்கவில்லை. அவர்களாகவே செலவு செய்தார்கள். முறைகேடு என கூறுவது தவறானது. போலி அடையாள அட்டைகளை ஒழித்தால் உண்மையான மாற்றுத்திறனாளிகள் பயனடைவார்கள். இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: