×

தேன்கனிக்கோட்டை அருகே பரபரப்பு மாணவியிடம் சில்மிஷம் தலைமை ஆசிரியருக்கு உதை: காரில் தப்பி ஓடியவரை வழிமறித்து தாக்குதல்

தேன்கனிக்கோட்டை: தேன்கனிக்கோட்டை அருகே அரசுப்பள்ளி மாணவியிடம் சில்மிஷத்தில் ஈடுபட்ட தலைமை ஆசிரியர் மீது, கிராம மக்கள் தாக்குதல் நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டையை சேர்ந்தவர் லாரன்ஸ். இவர் கெம்பகரை கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் தலைமை ஆசிரியராக பணியாற்றி வருகிறார். நேற்று பள்ளியில் பணி புரியும் 3 ஆசிரியர்கள், கிருஷ்ணகிரி மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்தில் நடந்த பணிமாறுதல் கவுன்சிலிங்குக்கு சென்றிருந்தனர். இதனால், தலைமை ஆசிரியர் லாரன்ஸ் மட்டும் பள்ளிக்கு சென்றுள்ளார். அப்போது, 7ம் வகுப்பு மாணவியிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இதனால் அச்சமடைந்த அந்த மாணவி, பெற்றோரிடம் தெரிவித்துள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த பெற்றோர் மற்றும் உறவினர்கள் 20க்கும் மேற்பட்டோர், பள்ளிக்கு சென்று தலைமை ஆசிரியரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். ஒரு கட்டத்தில் ஆத்திரம் அடைந்த அவர்கள், தலைமையாசிரியர் லாரன்சை அடித்து, உதைத்து கடுமையாக தாக்கியுள்ளனர். அவர்களிடம் இருந்து தப்பி காரில் ஏறி தேன்கனிக்கோட்டை நோக்கி செல்ல முயன்றார். அப்போது அவரை பின்தொடர்ந்து சென்ற கும்பல், அவரது கார் கண்ணாடியை உடைத்து, தாக்குதல் நடத்தியுள்ளனர். பின்னர் அவர்களிடமிருந்து தப்பித்து, தேன்கனிக்கோட்டையில் உள்ள வீட்டிற்கு சென்றுவிட்டார். இது குறித்து தகவல் அறிந்த அஞ்செட்டி போலீசார் விசாரணை மேற்கொண்டனர். தகவல் அறிந்த மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மகேஸ்வரி மற்றும் மாவட்ட கல்வி அலுவலர் அன்பழகன், அஞ்செட்டி போலீசார் கெம்பகரை கிராமத்திற்கு நேரில் சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags : Silmisham ,Dhenkanikottai , Silmisham headmaster kicks student near Dhenkanikottai: Assaults on a car escape
× RELATED உரிய ஆவணமின்றி கொண்டு சென்ற ₹92 ஆயிரம் பறிமுதல்