×

அதிமுக சார்பில் இப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சி இஸ்லாமியர்களின் அரணாக அதிமுக திகழும்: ஓ.பன்னீர்செல்வம் பேச்சு

சென்னை: இஸ்லாமியர்களின் அரணாக அதிமுக திகழும் என்று அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் கூறினார். அதிமுக சார்பில் சென்னையில் இப்தார் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இதில் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள், முன்னாள் அமைச்சர்கள் பலர் கலந்து கொண்டனர். அதைத் தொடர்ந்து அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம் பேசியதாவது: இறை நம்பிக்கை, தொழுகை, நோன்பு, தர்மம், ஹஜ் ஆகியவை இஸ்லாத்தின் ஐந்து முக்கியக் கடமைகள் ஆகும். ரமலான் மாதத்தில் நோன்பு இருப்பதன் மூலம், அகமும்,  புறமும் தூய்மையடைகிறது. தூய்மையடைவதன் மூலம் இறைப்பற்றும், அன்பும்  மேலோங்குகிறது. தர்ம சிந்தனை தழைத்தோங்குகிறது. கெட்டவைகள் நம்மைவிட்டு அகலுகின்றன.

உலமாக்கள்  ஓய்வூதியம் உயர்வு, உமறுப்புலவர் பெயரில் விருது, தர்காக்களில்  அன்னதானத்திட்டம், நோன்பு கஞ்சி தயாரிக்க விலையில்லா அரிசி வழங்கும்  திட்டம், மாவட்ட காஜிகளுக்கு மாதந்தோறும் ரூ.2000 மதிப்பூதியம் என பல  திட்டங்களை சொல்லலாம். இஸ்லாமியர்களின் அரணாக அதிமுக திகழும், என்பதை  தெரிவித்துக் கொள்கிறேன் என்றார். அதைத் தொடர்ந்து இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி பேசுகையில்: நோன்பு இருப்பதன் மூலம், நோன்பு இருப்பவருக்கும், இறைவனுக்கு ஒரு புனிதமான தொடர்பு ஏற்படுகிறது.

ஒவ்வோர் ஆண்டும் உலகம் முழுவதும் உள்ள இஸ்லாமியர்களின் இந்த புனிதமான தொடர்புக்கு தங்களுக்கு தானே வைத்துக் கொள்ளும் பரிசோதனைகள் தான் நோன்பு. இதில் ஒருவர் எந்த அளவுக்கு ஈடுபாடுடன் நோன்பை கடைபிடிகிறாரோ, அந்த அளவுக்கு அவர் இறைவனின் கருணைக்கும், அன்புக்கும், அருளுக்கும் பாத்திரமாக விளங்குவார். இறைவனின் கட்டளைப்படி நோன்பு இருந்து, தொழுகையில் ஈடுபட்டு தானதர்மங்கள் வழங்கி நற்செயல்கள் புரிந்து நன்மைகளை அதிகம் செய்து சொர்க்கத்தை பெற்றுக்கொள்ள நம் அனைவரும் முன்வர வேண்டும்.

பெரும்பான்மையின மக்கள்பெறும் அனைத்து சலுகைகளும், உரிமைகளும், சிறுபான்மையினருக்கும் கிடைக்க வேண்டும் என்பதே நமது மதச்சார்பற்ற அரசியலமைப்பு சட்டத்தின் சாராம்சம் என்றார் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா.  ஒற்றுமையே மட்டுமே வேதமாகக் கருதி செயல்பட்டதன் விளைவாகத் தான் தமிழ்நாட்டு மக்கள் மத, இன் வேறுபாடுகளை கடந்து இன்றும் மதநல்லிக்கணத்துடன் வாழ்ந்து, இந்தியாவிற்கே ஓர் உதாரணமாக வாழ்ந்து வருகிறார்கள். மேலும் அனைத்து மக்களும் நலமாகவும், வளமாகவும் வாழவேண்டும் என்று இந்த இப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சியின் மூலம் எல்லா வல்ல இறைவனை உளரமார வேண்டுகிறேன். இவ்வாறு கூறினர்.


Tags : Iftar ,Islam ,Islamists ,Panneisselvam , AIADMK will be the bulwark of Islamist iftar fast opening ceremony on behalf of AIADMK: O. Panneerselvam speech
× RELATED ஒரே மேடையில் பாஜ கூட்டணி தலைவர்கள் தமாகா இப்தார் நோன்பு திறப்பு