பொறுப்பில் இருந்து விலகி நிற்கும் மோடி: ராகுல் குற்றச்சாட்டு

புதுடெல்லி:  பிரதமர் மோடி தனது பொறுப்பில் இருந்து விலகி, மாநிலங்கள் மீது குறை கூறுவதாக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி விமர்சித்துள்ளார். பெட்ரோல், டீசல் விலை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில், நேற்று முன்தினம் பிரதமர் மோடி மாநில முதல்வர்களுடன் கலந்துரையாடினார். அப்போது, ஒன்றிய அரசு கடந்த ஆண்டு நவம்பரிலேயே எரிபொருள் மீதான வரியை குறைத்துவிட்டதாகவும், ஆனால் எதிர்க்கட்சிகள் ஆளும் சில மாநிலங்கள் வரியை குறைக்காமல் அதன் பலனை பொதுமக்களுக்கு வழங்காமல் அநீதி இழைப்பதாக குற்றம்சாட்டினார். தேசிய நலனை கருத்தில் கொண்டு வரியை குறைக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி இருந்தார். இதற்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றன. இது தொடர்பாக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி நேற்று வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில், ‘மொத்த எரிபொருள் விலையில் 68 சதவீதத்தை ஒன்றிய அரசு எடுத்துக் கொள்கிறது. எனினும், பிரதமர் தனது பொறுப்பில் இருந்து விலகி நின்று கொண்டு மாநிலங்கள் மீது குற்றம்சாட்டுகிறார். பிரதமரின் கூட்டாட்சி என்பது கூட்டுறவு அல்ல கட்டாயப்படுத்துவதாக உள்ளது,’ என்று குற்றம்சாட்டி உள்ளார்.

Related Stories: