×

இலங்கையில் நீடிக்கும் சிக்கல் அனைத்து கட்சி தலைவர்களுடன் கோத்தபய நாளை ஆலோசனை: இடைக்கால அரசு அமைக்க அழைப்பு

கொழும்பு: இலங்கையில் அனைத்து கட்சிகளும் பங்கேற்கும் இடைக்கால அரசு அமைக்க  அதிபர் கோத்தபய ராஜபக்சே முடிவு செய்துள்ளார். இது தொடர்பாக நாளைய ஆலோசனை  கூட்டத்துக்கு அழைப்பு விடுத்துள்ளார். இலங்கையில் ஏற்பட்டுள்ள கடும் நிதி, பொருளாதார நெருக்கடிக்கு பொறுப்பேற்று ராஜபக்சே குடும்பத்தினர் பதவி விலக வலியுறுத்தி பொதுமக்கள் கடந்த 9ம் தேதி முதல் அரசுக்கு எதிரான போராட்டத்தில் இறங்கி உள்ளனர். ராஜபக்சேக்கள் தலைமையிலான அரசை கலைத்து விட்டு, அனைத்து கட்சிகளையும் கொண்ட இடைக்கால கூட்டணி அரசை நிறுவ எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்து வருகின்றன. இதையே தேர்தல் ஆணையமும் வலியுறுத்தியது. இதனிடையே, மகிந்த ராஜபக்சே வரும் 30ம் தேதிக்குள் பதவி விலகவில்லை என்றால், அரசு மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர எதிர்க்கட்சிகள் முடிவு செய்தன.

ஆனால் ராஜினாமா செய்ய வலியுறுத்தும், போராட்டக்காரர்களின் கோரிக்கையை ஏற்க மறுத்து அதிபர் கோத்தபய, பிரதமர் மகிந்த ராஜபக்சே ஆகியோர் ஆட்சியில் நீடித்து வருகின்றனர். அதேநேரம் பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண உலக வங்கி மற்றும் சர்வதேச நாடுகளிடம் இருந்து கடன்பெறும் முயற்சிகளை முடுக்கி விட்டுள்ளனர். மேலும், தங்களுக்கு எதிரான அரசியல் நெருக்கடி மற்றும் ெபாதுமக்கள் போராட்டத்துக்கு தீர்வு காணவும் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். இந்த நடவடிக்கையின் ஒரு பகுதியாக, இலங்கையில் அனைத்து கட்சிகளும் இணைந்த இடைக்கால அரசு அமைக்க அதிபர் கோத்தபய ராஜபக்சே திட்டமிட்டுள்ளார். இது தொடர்பாக அனைத்து கட்சிகளுக்கும், சுயேச்சை எம்.பி.க்களுக்கும் கடிதம் எழுதியுள்ளார். அதில், ‘நாடு தற்போது எதிர்கொண்டு வரும் பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண ‘அனைத்து கட்சி அரசு’ அமைக்க கொள்கை அளவில் ஒப்பு கொண்டிருப்பதாக கூறியுள்ளார்.

இந்த அனைத்துக்கட்சி அரசின் வடிவம் குறித்து பிரதமர் மகிந்த ராஜபக்சே தலைமையிலான அமைச்சரவை விவாதித்து முடிவு எடுக்குமாறு அறிவுறுத்தி உள்ள கோத்தபய ராஜபக்சே, நாளை நடைபெறும் இந்த ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்குமாறு அனைத்து கட்சிகளின் தலைவர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார். பிரதமர் மகிந்த ராஜபக்சே பதவி விலகி இடைக்கால அரசு அமைக்க வேண்டும் என கோரிக்கை எழுந்த நிலையில், நாட்டில் அனைத்து கட்சிகளும் இணைந்த இடைக்கால அரசு அமைக்க கோத்தபய ராஜபக்சே முடிவு செய்துள்ளார். அதேநேரம் தான் பதவி விலக மாட்டேன் எனவும், எந்தவித இடைக்கால அரசும் தனது தலைமையில்தான் அமைய வேண்டும் எனவும் மகிந்த ராஜபக்சே கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது. இதை மேலும் அவர் உறுதிப்படுத்தி உள்ளார். இது தொடர்பாக செய்தி நிறுவனம் ஒன்றுக்கு அவர் அளித்த பேட்டியில், நாடாளுமன்றத்தில் எனக்கு பெரும்பான்மை ஆதரவு உள்ளது. நான் பதவி விலக வேண்டும் என பெரும்பான்மை எம்பிக்கள் விரும்பினால் விலகித்தான் ஆக வேண்டும். தற்போது அந்த கேள்விக்கே இடமில்லை.

மக்கள் எங்களுக்கு வழங்கிய ஆதரவு மூலமாகத்தான் அரசு அமைத்தோம். எங்களை மாற்ற வேண்டும் என மக்கள் விரும்பினால், தேர்தல் மூலம் அதை செய்யட்டும். நான் பதவி விலக வேண்டும் என்று ஒரு குறிப்பிட்ட பிரிவினர் விரும்பினால் அது ஒட்டுமொத்த மக்களின் குரலாக இருக்க முடியாது. நாட்டு மக்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் தடையின்றி கிடைக்க எங்களால் முடிந்த அளவு கடுமையாக உழைத்து வருகிறோம். அத்தியாவசிய மருந்துகள் உள்ளிட்ட பொருட்கள் இறக்குமதி செய்ய உலக வங்கி உள்ளிட்ட நிறுவனங்கள் எங்களுக்கு உதவி வருகின்றன. நானும்  கோத்தபய ராஜபக்சேவும் ஓரணியில்தான் இருக்கிறோம். கோத்தபய ராஜபக்சே அதிபர். எனவே அதிபருக்குரிய மரியாதையை நான் கொடுக்க வேண்டும். அவர் எனது இளைய சகோதரராக இருக்கலாம். ஆனால் அது வேறு விஷயம்’ என்றார்.

Tags : Sri Lanka ,Gothabaya , Prolonged problem in Sri Lanka Gotabhaya consults with all party leaders tomorrow: Call for formation of interim government
× RELATED இலங்கைக்கு கடத்தப்பட்ட பீடி இலைகள் படகுடன் பறிமுதல்