×

தமிழகத்தில் உள்ள 550 திருக்கோயில்களுக்கு 1500 கையடக்க கருவிகளை வழங்கினார் அமைச்சர் பி.கே.சேகர்பாபு.!

சென்னை: 550 திருக்கோயில்களுக்கு 1500 கையடக்க கருவிகளை மாண்புமிகு  இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் திரு.பி.கே.சேகர்பாபு அவர்கள் திருக்கோயில் இணை ஆணையர்களிடம்  வழங்கினார்கள். மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களின் வழிகாட்டுதலின்படி இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டிலுள்ள 550 திருக்கோயில்களுக்கு 1500 கையடக்க கருவிகளை மாண்புமிகு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் திரு.பி.கே.சேகர்பாபு அவர்கள் திருக்கோயில் இணை ஆணையர்களிடம் வழங்கினார்கள்.

அதன் பின்பு செய்தியாளர்களிடம் கூறியதாவது, வளர்ந்து விட்ட நாகரித்திற்கு ஏற்ப பல்வேறு வகையில் இன்றைக்கு இருக்கின்ற இடத்திலே இருந்து அனைத்து செய்திகளையும், தகவல்களையும் தெரிந்து கொள்கின்ற ஒரு விஞ்ஞான வளர்ச்சி மிகுந்த இந்த காலத்தில் இந்து சமய அறநிலையத்துறை அதற்கு தகுந்தாற்போல் புதிய தொழில்நுட்பங்களை பக்தர்களுக்காக திருக்கோயில்களில் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. கடந்த 11.04.2022 அன்று 550 திருக்கோயில்களில் இணையவழி மற்றும் கட்டணச் சீட்டு மையங்களில்  கணினிவழி  255 திருக்கோயில்  சேவைகள் வழங்கும் திட்டம் தொடங்கி வைக்கப்பட்டது.

அதனைத் தொடர்ச்சியாக, 550  திருக்கோயில்களில் பக்தர்கள் எளிதில் பயன்பெறும் வகையில் திருக்கோயில் சேவைகளுக்கு இணைய வழியில் முன்பதிவு செய்து கொள்ளவும், கட்டணச்சீட்டு மையங்களில் கணினி வாயிலாக ரசீதுகள் பெறுவதற்கும் இந்து சமய அறநிலையத்துறையின் வலைதளத்தில் (www.hrce.tn.gov.in) வழிவகை செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு இணையவழியிலும், கட்டணச் சீட்டு மையங்களில் கணினி மூலம் வழங்கப்படும் ரசீதுகளில்  விரைவுக் குறியீடு (Q.R. Code) அச்சிடப்பட்டு  இருக்கும். சேவைகளை முன்பதிவு செய்யும் வசதியினை எளிமைப்படுத்தவும், விரைவுப்படுத்தவும் மற்றும்  கட்டணச் சீட்டு மையங்களில் கூட்டத்தினை தவிர்க்கவும் 1500 கையடக்க கருவிகள் வழங்கப்பட்டுள்ளது.

அதன் அடையாளமாக திருத்தணி அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலிற்கு 22, திருவல்லிக்கேணி அருள்மிகு பார்த்தசாரதி சுவாமி  திருக்கோயிலிற்கு 4, திருவொற்றியூர் அருள்மிகு தியாகராஜ சுவாமி திருக்கோயிலிற்கு 8, வடபழனி அருள்மிகு வடபழனி ஆண்டவர் திருக்கோயிலிற்கு 5, திருவேற்காடு அருள்மிகு தேவி கருமாரியம்மன் திருக்கோயிலிற்கு 6 மற்றும் மயிலாப்பூர் அருள்மிகு கபாலீசுவரர் திருக்கோயிலிற்கு  5 ஆக மொத்தம் 50 கையடக்க கருவிகளை வழங்கப்பட்டுள்ளது.

இந்த சேவையினை முறைப்படுத்தும் பொழுது குறிப்பிட்ட ஒரு சேவைகள் அதிக அளவில் அந்தந்த திருக்கோயிலிலே அதிக பக்தர்கள் எதிர்பார்ப்பு இருக்கின்ற பொழுது முதலிலே பதிவு செய்பவர்களுக்கு முதலிடம் என்ற வகையிலே அனைவருக்கும் சரிசமமான சேவைக்கு பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்துவதற்கு, தவறுகள் நடைபெறாமல் இருப்பதற்கு, ஒரு சிறந்த வழி என்று இந்த வழியை தேர்வு செய்து இதனை அறிமுகப்படுத்தி இருக்கின்றோம்,  இதற்கு பெரும்பாலும் பக்தர்களுக்கு மத்தியில் பெரியதொறு வரவேற்பு கிடைத்திருக்கின்றது. ஆகவே இந்தமுறை விரிவுபடுத்தப்பட்டு அனைத்து திருக்கோயில்களுக்கும் சென்றடைகின்ற வகையில் இந்து சமய அறநிலையத்துறை தன்னுடைய நடவடிக்கைகளை துரிதமாக்கி செயல்படும் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்.

இந்த கையடக்க கருவிகளை இரண்டு சிம் கார்டுகளை பொருத்தலாம். பக்தர்களிடம் சேவைக்கான கட்டணத்தைப் ரொக்கமாக பெற்றுக்கொண்டு விரைவுக் குறியீடு அச்சிடப்பட்ட ரசீது வழங்கப்படும். வெகுவிரைவில் கடன் அட்டை (Credit Card) மற்றும் பற்று அட்டை (Debit Card) ஆகியவற்றை உபயோகப்படுத்தி கட்டணம் செலுத்தும் முறையும் அறிமுகப்படுத்தப்படும். இம்முனையங்களில் நடைபெறும் பரிவர்த்தனைகளை செயல் அலுவலர்கள் மற்றும் உயர் அலுவலர்களால் உடனுக்குடன் கண்கானித்திட இயலும். இந்த சேவை பாரத ஸ்டேட் வங்கி மற்றும் தேசிய தகவல் மையத்துடன் இணைந்து இந்து சமய அறநிலையத்துறையின் ஒருங்கினைந்த திருக்கோயில் மேலான்மைத் திட்ட மென்பொருள் வாயிலாக செயல்படுத்தப்படுகிறது.

அயோத்திய மண்டபத்தினை பொருத்தளவில் நீதிமன்றம் என்ன வழிகாட்டுதலை பிறப்பிக்கின்றதோ அந்த வழிகாட்டுதலின்படி இந்து சமய அறநிலையத்துறை செயல்படும் என்றும், அடுத்தகட்ட நடவடிக்கையாக சட்ட வல்லுநர்களுடன் ஆராய்ந்து மாண்புமிகு முதலமைச்சரிடம் கொண்டு சென்று முடிவு எடுக்கப்படும். தஞ்சாவூர் அருகே அப்பர் சப்பரம் திருவிழாவை அந்த பகுதியை சேர்ந்த மக்களே நடத்தியுள்ளனர். இத்திருக்கோயில் துறை கட்டுப்பாட்டில் இல்லாத திருக்கோயிலாகும். இருந்தாலும், இது போன்ற அசாம்பிவிதங்கள் நடைபெறாமல் இருக்க, முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்படும். அதிகமாக பக்தர்கள் கூடுகின்ற தேர்திருவிழாக்களில் சிறப்பு குழுக்கள் அமைக்கப்பட்டு கண்காணிக்கப்படும்.

வெளிநாடுகளில் மீட்கப்பட்டு அருங்காட்சியங்கள் வைக்கப்பட்டுள்ள சிலைகள் எந்த கோயிலுக்கு சொந்தமானது என ஆதாரங்கள் கிடைக்கும் பட்சத்தில் சிலைகளை உரிய கோயில்களில் கொண்டு வருவதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் தெரிவித்தார். இந்நிகழ்ச்சியில் ஆணையர் திரு.ஜெ.குமரகுருபரன் இ.ஆ.ப., மாவட்ட வருவாய் அலுவலர் (நிலங்கள் பிரிவு) திரு.ஆர்.சுகுமார், இணை ஆணையர்கள் திரு.ந.தனபால், திரு.அர.சுதர்சன், திரு.எ.டி.பரஞ்சோதி, திரு.சி.லட்சுமணன், திருமதி ரேணுகாதேவி, திருமதி தா.காவேரி, கே.சித்ராதேவி மற்றும் அலுவலர்கள் கலந்துக் கொண்டனர்.


Tags : Minister ,P. K. Segerbabu , Minister BK Sekarbabu donated 1500 portable tools to 550 temples in Tamil Nadu!
× RELATED பாஜவுக்கு முகவர்கள் இருந்தால்தானே...