×

155 கி.மீ. வேகத்தில் பந்துவீசுவதே லட்சியம்; ஆட்டநாயகன் உம்ரான் மாலிக் பேட்டி

மும்பை: ஐபிஎல் தொடரில் மும்பை வான்கடே மைதானத்தில் நேற்று நடந்த 40வது லீக் போட்டியில் சன்ரைசர்ஸ் ஐதராபாத்-குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற குஜராத் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து முதலில் பேட்டிங் செய்த ஐதராபாத் 20 ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு 195 ரன் எடுத்தது. அதிகபட்சமாக அபிஷேக் சர்மா 65 (42 பந்து, 6 பவுண்டரி, 3 சிக்சர்), மார்க்ரம் 56 ரன் (40 பந்து, 2 பவுண்டரி, 3 சிக்சர்) அடித்தனர். வில்லியம்சன் 5, திரிபாதி 16, பூரன், வாஷிங்டன் சுந்தர் தலா 3 ரன்னில் அவுட் ஆகினர். ஷஷாங்க் சிங் நாட்அவுட்டாக 6 பந்தில், ஒரு பவுண்டரி, 3 சிக்சருடன் 25 ரன் எடுத்தார். குஜராத் பந்துவீச்சில் ஷமி 3 விக்கெட் வீழ்த்தினார். பின்னர் களம் இறங்கிய குஜராத் அணியில் சுப்மான்கில் 22, ஹர்திக் பாண்டியா 10, டேவிட் மில்லர் 17 ரன்னில் வெளியேற விருத்திமான் சகா 38 பந்தில் 11 பவுண்டரி, ஒரு சிக்சருடன் 68 ரன் எடுத்தனர். கடைசி 4 ஓவரில் 56 ரன் தேவைப்பட்ட நிலையில் ராகுல் திவாடியா, ரஷீத்கான் அதிரடியில் மிரட்டினர்.

நடராஜன் வீசிய 19வது ஓவரில் ஒரு சிக்சர், பவுண்டரி என 13 ரன் எடுத்தனர். இதனால் கடைசி ஓவரில் 22 ரன் தேவைப்பட்டது. மார்கோ ஜான்சன் வீசிய அந்த ஓவரின் முதல் பந்தில் திவாடியா சிக்சர் விளாச அடுத்த பந்தில் ஒரு ரன் எடுத்தார். 3வது பந்தை எதிர்கொண்ட ரஷீத்கான் லாங்ஆன் திசையில் சிக்சர் தூக்கினார். 4வது பந்து டாட் பால் ஆனது. புல்டாசாக வீசப்பட்ட 5வது பந்தை எக்ஸ்டிரா கவர் திசையில் சிக்சருக்கு பறக்கவிட்டார். கடைசி பந்தில் 3 ரன் தேவைப்பட பைன்லெக் திசையில் சிக்சர் விளாசினார். 20 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 199 ரன் எடுத்த குஜராத் 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. நாட்அவுட்டாக ரஷீத்கான் 11 பந்தில் 4 சிக்சருடன் 31, திவாடியா 21 பந்தில் 4 பவுண்டரி, 2 சிக்சருடன் 40 ரன் எடுத்தனர். ஐதராபாத் பந்துவீச்சில் உமரான்மாலிக் 25 ரன் மட்டுமே கொடுத்து 5 விக்கெட் வீழ்த்தினார். அவருக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது. 8வது போட்டியில் 7வது வெற்றியை பெற்ற குஜராத் பட்டியலில் முதல் இடத்திற்கு முன்னேறியது. ஐதராபாத் 3வது தோல்வியை சந்தித்தது.

வெற்றிக்கு பின் குஜராத் கேப்டன் ஹர்திக் பாண்டியா கூறுகையில், ``நீங்கள் நல்லவர்கள், நான் உங்களுக்கு உதவுகிறேன்’’ என்று கடவுள் எங்களிடம் கூறுகிறார் என்று டிரஸ்ஸிங் ரூமில் நான் கேலி செய்து கொண்டே இருக்கிறேன். அணிக்கு தேவைப்படும் போது நான் பந்துவீசுவேன். சகா சிறப்பாக பேட்டிங் செய்தார். அற்புதமான ஷாட்களை ஆடினார். திவாடியா, ரஷீத்கானுக்கு தன்னம்பிக்கை அதிகம். அவர்களை நாங்கள் எப்போதும் ஆதரிக்கிறோம்’’ என்றார். ஆட்ட நாயகன் உம்ரான் மாலிக் கூறியதாவது: ”என்னால் முடிந்தவரை வேகமாக பந்துவீச வேண்டும் என்ற எண்ணம் இருந்தது. சிறிய மைதானம் என்பதால் சிறந்த லைன் லென்த்களில் பந்துவீச முயற்சித்தேன். ஸ்டம்புகளைத் தாக்குவது என்பது எனக்கு நன்றாக வேலை செய்தது. நான் மணிக்கு 155 கிமீ வேகத்தில் பந்துவீச வேண்டுமென்றால் கடவுள் விரும்பினால், நான் ஒரு நாள் அதைச் செய்வேன். ஆனால் அணிக்கு நன்றாக பந்துவீசி விக்கெட்டுகளை எடுப்பதே முக்கிய குறிக்கோள்’’ என்றார். நடப்பு சீசனில் உம்ரான் மாலிக் 15 விக்கெட் எடுத்து 2வது இடத்தில் உள்ளார்.


Tags : Umran Malik , 155 km The ambition is to bowl at speed; Interview with captain Umran Malik
× RELATED 151.03 கிமீ வேகத்தில் பந்து வீசி காஷ்மீர் எக்ஸ்பிரஸ் உம்ரான் மாலிக் மிரட்டல்