நாகர்கோவில் - திருநெல்வேலி இடையே இயக்கப்படும் என்ட் டூ என்ட் பஸ்களை நிறுத்த திட்டமா?: அதிகாரியின் செயலால் பயணிகள் அதிர்ச்சி

நாகர்கோவில் : நாகர்கோவில் - திருநெல்வேலி இடையே 20 என்ட் டூ என்ட் பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இதில் 4 பஸ்கள் குளிர்சாதன வசதி கொண்டவை ஆகும். இந்த பஸ்கள் நாகர்கோவில் - திருநெல்வேலி இடையே காவல்கிணறு சந்திப்பில் மட்டும் நிற்கும். இதனால் இந்த பஸ்களில் எப்போதும் பயணிகள் கூட்டம் நிரம்பி வழியும். நாகர்கோவிலில் இருந்தும், திருநெல்வேலியில் இருந்தும் அதிகாலை 3.45 மணி முதல் என்ட் டூ என்ட் பஸ்கள் இயங்க தொடங்கும். நாகர்கோவில், திருநெல்வேலியில் உள்ள பள்ளி, கல்லூரிகள் மற்றும் அரசு, தனியார் நிறுவனங்களில் பணியாற்றுபவர்களுக்கு  என்ட் டூ என்ட் பஸ்கள் வரப்பிரசாதமாக உள்ளன. நாள் ஒன்றுக்கு ஒவ்வொரு பஸ்சிலும் குறைந்த பட்சம் தலா ₹30 ஆயிரம் வருமானம் வருகிறது.

இந்த நிலையில் திருநெல்வேலியில் புதிதாக பொறுப்பேற்றுள்ள துணை போக்குவரத்து ஆணையர் நடராஜன் உத்தரவின் பேரில் நேற்று முன்தினம் திடீரென நான்கு வழிச்சாலையில் சோதனை மேற்கொண்ட நெல்லை மண்டல போக்குவரத்து அதிகாரிகள், என்ட் டூ என்ட் பஸ்களை நிறுத்தி கண்டக்டர்களிடம் விசாரணை மேற்கொண்டனர். நாங்குநேரி செல்லாமல் பஸ்களை இயக்க உத்தரவிட்டது யார்?  நாங்குநேரிக்கான டிக்கெட் உள்ளதா? என கேட்ட அதிகாரிகள், சம்பந்தப்பட்ட கண்டக்டர், டிரைவருக்கு மெமோ ெகாடுத்தனர். இது பற்றி அறிந்ததும் நாகர்கோவில் மண்டல போக்குவரத்து அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக இது தொடர்பாக நிர்வாக இயக்குனரை தொடர்பு ெகாண்டு பேசினர். நாகர்கோவில் - திருநெல்வேலி மார்க்கத்தில் பணகுடி, வள்ளியூர், நாங்குநேரி, ஏர்வாடி வழியாக திருநெல்வேலிக்கு 300 டிரிப் பேருந்துகள் இயங்குகின்றன. 20 என்ட் டூ என்ட் பஸ்களும், 4 பைபாஸ் வழி பஸ்களும் மட்டுமே, நேரடியாக திருநெல்வேலி செல்கின்றன. எனவே நாங்குநேரி, ஏர்வாடிக்கு போதுமான அளவு நாகர்கோவிலில் இருந்து பஸ்கள் உள்ளன.

இந்த நிலையில் என்ட் டூ என்ட் பஸ்களை திடீரென நாங்குநேரி செல்ல வேண்டும் என துணை போக்குவரத்து ஆணையரின் உத்தரவு அதிர்ச்சி அளிப்பதாக டிரைவர், கண்டக்டர்கள் கூறினர். என்ட் டூ என்ட் பஸ்கள் இயக்கத்தை மாற்றி அமைக்க பொதுமக்களும் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். என்ட் டூ என்ட் பஸ்களை வழக்கம் போல் இயக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். இது தொடர்பாக குமரி மாவட்ட போக்குவரத்து கழக அதிகாரிகளிடம் கேட்ட போது,  என்ட் டூ என்ட் பஸ்கள் வழக்கம் போல் இயங்கும். துணை போக்குவரத்து ஆணையர் புதிதாக பொறுப்பேற்றுள்ளதால் அவருக்கு தவறான தகவலை தெரிவித்துள்ளனர். இந்த பிரச்னை சரி செய்யப்பட்டு விடும். டிரைவர், கண்டக்டர்களுக்கு கொடுக்கப்பட்ட மெமோ ரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர்.

மு.க.ஸ்டாலின் உத்தரவு

நாகர்கோவில் - திருநெல்வேலி இடையே கடந்த 2010ம் ஆண்டில் இருந்து என்ட் டூ என்ட் பஸ்கள் இயக்கப்படுகின்றன. நாகர்கோவில் எஸ்.எல்.பி. பள்ளி வளாகத்தில் கடந்த 2010ல் நடந்த நிகழ்ச்சியில், அப்போது துணை முதல்வராக இருந்த மு.க.ஸ்டாலின் தான் என்ட் டூ என்ட் பஸ்கள் இயக்கத்துக்கான உத்தரவை பிறப்பித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories: