சென்னை ஐஐடி தனது அதிகார பூர்வ நிகழ்ச்சிகளில் வந்தேமாதரம், மற்றும் தேசிய கீதத்துடன் கூடுதலாக தமிழ்த்தாய் வாழ்த்து பாடலை இசைக்கலாம்: ஒன்றிய அரசு

சென்னை: சென்னை ஐஐடி தனது அதிகார பூர்வ நிகழ்ச்சிகளில் வந்தேமாதரம், மற்றும் தேசிய கீதத்துடன் கூடுதலாக தமிழ்த்தாய் வாழ்த்து பாடலை சேர்க்கலாம் என்று ஒன்றிய அரசு கூறியுள்ளது. கடந்த ஆண்டு நவம்பர் மாதம் சென்னை ஐஐடியில் நடைபெற்ற 58-வது பட்டமளிப்பு விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து புறக்கணிக்கப்பட்டது சர்ச்சையானது.

இதனை அடுத்து தமிழ்நாடு உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, சென்னை ஐஐடி இயக்குனர் பாஸ்கர் ராமமூர்த்திக்கு எழுதிய கடிதத்தில் பட்டமளிப்பு விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து புறக்கணிக்கப்பட்டது ஏமாற்றம் அளிப்பதாக குறிப்பிட்டிருந்தார். தமிழ்நாட்டில் நடக்கும் அனைத்து ஒன்றிய அரசு, மாநில அரசு நிகழ்ச்சிகளிலும், பிரதமர், குடியரசுத்தலைவர் கலந்துகொள்ளும் நிகழ்ச்சிகளிலும் தமிழ்த்தாய் வாழ்த்து பாடுவது நீண்டநாள் மரபாக இருக்கும் போது, ஐஐடியில் நடக்கும் விழாக்களில் தமிழ்த்தாய் வாழ்த்து இடம்பெறுவதை கட்டாயம் உறுதி செய்ய வேண்டும் என்று கடிதத்தில் பொன்முடி வலியுறுத்தியிருந்தார்.

இந்நிலையில் சென்னை ஐஐடி தனது அதிகார பூர்வ நிகழ்ச்சிகளில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடலை சேர்க்கலாம் என்று ஒன்றிய அரசு கூறியுள்ளது. சென்னை ஐஐடியில் வந்தேமாதரம், மற்றும் தேசிய கீதத்துடன் கூடுதலாக தமிழ்த்தாய் வாழ்த்து பாடலையும் இசைக்கலாம் என்று ஒன்றிய கல்வித்துறை தெரிவித்துள்ளது. இது தொடர்பான தகவல் விரைவில் சென்னை ஐஐடி-க்கு அனுப்பப்பட இருப்பதாக ஒன்றிய கல்வித்துறை வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

கடந்த டிசம்பர் 17-ம் தேதி தமிழ்த்தாய் வாழ்த்து பாடலை மாநில கீதமாக பிரகடனம் செய்த தமிழ்நாடு அரசு, அனைத்து விழாக்களிலும் தமிழ்த்தாய் வாழ்த்து பாடலை இசைக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Related Stories: