தேன்கனிக்கோட்டை: தேன்கனிக்கோட்டை அருகே சாலையோரம் உலா வந்த ஒற்றை யானையை கிராம மக்கள் விசில் அடித்தும், சத்தம் போட்டும் காட்டிற்குள் விரட்டினர்.கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை வனப்பகுதியில் 10க்கும் மேற்பட்ட யானைகள் மூன்று பிரிவுகளாக பிரிந்து, பயிர்களை நாசம் செய்து வருகின்றன. அதில் தனியாக சுற்றி வரும் ஒற்றை யானை, அவ்வப்போது கிராம பகுதிகளில் நுழைந்து பயிர்களை நாசம் செய்து விட்டு, மீண்டும் காட்டிற்குள் சென்றுவிடுகிறது. இந்நிலையில் நேற்று காலை, குந்தக்கோட்டை கிராமம் அருகேயுள்ள சாலையோரத்தில், ஒற்றை யானை சுற்றித்திரிந்தது. இதனை பார்த்த கிராம மக்கள் விசில் அடித்தும், சத்தம் போட்டும் யானையை அங்கிருந்து விரட்டும் முயற்சியில் ஈடுபட்டனர்.