திருத்துறைப்பூண்டியில் ரயில்வே இடத்தில் ஆக்கிரமிப்பு 9 வீடுகள் இடித்து அகற்றம்

திருத்துறைப்பூண்டி: திருத்துறைப்பூண்டி அருகே ரயில்வேதுறைக்கு சொந்தமான இடத்தில் ஆக்கிரமித்து கட்டப்பட்ட மாடி வீடு, கூரை வீடுகள் உள்பட 9 வீடுகளை துறை அதிகாரிகள் இடித்து அகற்றினர்.திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி அருகே ஆலத்தம்பாடி பொன்னிரை பகுதியில் ரயில்வே லைன் பகுதியில் ரயில்வே துறைக்கு சொந்தமான இடங்களில் தனி நபர்கள் ஆக்கிரமிப்பு செய்து வீடுகளை கட்டியிருந்தனர். கடந்த 2019ல் ஆக்கிரமித்து கட்டப்பட்ட வீடுகளை அகற்ற காலக்கெடு வழங்கியும் அகற்றவில்லை. அதையடுத்து மேலும் 40 நாட்கள் கால அவகாசம் வழங்கியும் ஆக்கிரமிப்புகளை அகற்ற முன்வரவில்லை.

இதனால் ரயில்வே துறை சீனியர் இன்ஜினியர் சுரேஷ்பாபு தலைமையில் ஆலிவலம் போலீஸ் பாதுகாப்புடன் ரயில்வேக்கு சொந்தமான இடத்தில் ஆக்கிரமித்து கட்டப்பட்ட வீடுகளை புல்டோசர் மூலம் அகற்றும் பணியில் ஈடுபட்டனர். இரண்டு மாடி வீடுகள், கூரை வீடுகள் உள்ளிட்ட 9 வீடுகளை இடித்து அகற்றினர். ஆக்கிரமிப்பு அகற்றும் பணிகளை மன்னார்குடி ஆர்டிஒ அழகர்சாமி, தாசில்தார் அலெக்சாண்டர் மற்றும் அலுவலர்கள் பார்வையிட்டனர். ஆக்கிரமிப்பு அகற்றும் பகுதிகளில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

Related Stories: