×

கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு: அதிமுக பிரமுகர் சஜீவனின் சகோதரர் சிபியிடம் தனிப்படை போலீசார் விசாரணை

கோவை: கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில், அதிமுக பிரமுகர் சஜீவனின் சகோதரர் சிபியிடம் தனிப்படை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கடந்த 2 நாட்களாக சஜீவனிடம் விசாரணை நடத்தி வந்த நிலையில், இன்று அவருடைய சகோதரரிடம் விசாரணை நடைபெறுகிறது. கொடநாடு பங்களாவில் மர வேலைப்பாடுகள் செய்து வந்த பர்னிச்சர் கடை உரிமையாளரும், அ.தி.மு.க வர்த்தக அணி மாநில தலைவருமான சஜீவனிடம் 2 நாட்களாக போலீசார் விசாரணை நடத்தினர். மேற்கு மண்டல ஐ.ஜி.சுதாகர் தலைமையில் தனிப்படை போலீசார் அவரிடம் விசாரணை மேற்கொண்டனர். கொடநாடு கொள்ளை சம்பவம் நடந்த போது சஜீவன் துபாயில் இருந்தாக கூறப்பட்டது. அவர் துபாய் சென்றதற்கான காரணம் என்ன? கொடநாடு கொள்ளை சம்பவத்தில் அவருக்கு ஏதாவது தொடர்பு உள்ளதா? எனவும் விசாரித்தனர். இவர் கனகராஜின் நெருங்கிய நண்பர் எனவும் கூறப்படுகிறது.

இதனால் கனகராஜ் குறித்தும், கொடநாடு கொள்ளை சம்பவத்திற்கு பிறகு அவர் உங்களை ஏதாவது தொடர்பு கொண்டு பேசினாரா? என்பது குறித்தும் போலீசார் அவரிடம் கேள்விகள் கேட்டதாக தெரிகிறது. கொடநாடு கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட கும்பல் 2 பிரிவாக பிரிந்து ஒரு கும்பல் கேரளாவை நோக்கியும், மற்றொரு கும்பல் கோவையை நோக்கியும் சென்றன. அப்போது கேரளாவுக்கு சென்ற கும்பல் கூடலூர் சோதனை சாவடியில் போலீசாரிடம் சிக்கியதாகவும், இந்த கும்பலை இவர் தப்பிக்க வைத்தாகவும், அந்த சமயத்தில் பலராலும் பேசப்பட்டு வந்தது. அது தொடர்பாகவும் தனிப்படை போலீசார் விசாரித்தனர். எனவே கொடநாடு வழக்கை விசாரித்து வரும் குன்னூர் டி.எஸ்.பி சுரேஷ் பணி இட மாற்றம் செய்து உத்தரவிடப்பட்டுள்ளது. நீலகிரி மாவட்ட குற்றபிரிவு டிஎஸ்பி சந்திரசேகர் குன்னூர் டிஎஸ்பியாக நியமனம் செய்யப்பட்டுள்ளார். கொடநாடு வழக்கை விசாரிக்கும் தனிப்படையில் டிஎஸ்பி சுரேஷ் இடம்பெற்றுள்ள நிலையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.


Tags : Kodanadu ,Sajiva Sajiva , Kodanadu murder, robbery,, CBI, police, investigation
× RELATED கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு தொடர்பாக...