பச்சிலை நாச்சியம்மன் அணையை சீரமைத்து நீர்மட்டத்தை உயர்த்த நடவடிக்கை எடுக்கப்படுமா? : விவசாயிகள் எதிர்பார்ப்பு

பெரியகுளம்: பெரியகுளம் அருகே ஜி.கல்லுப்பட்டி பகுதியில் 2003ம் ஆண்டு 160 ஏக்கர் நேரடி பாசனத்திற்கும், 1000க்கும் மேற்பட்ட ஏக்கர் நிலங்களின் நிலத்தடி நீர்மட்டம் உயர்வு உள்ளிட்ட பாசன வசதிக்காக பச்சிலை நாச்சி அம்மன் அணை கட்டப்பட்டது. இந்த அணை கட்டி முடித்த ஆண்டு முதல் 20 ஆண்டுகளாக மழை காலங்களில் பெய்யும் மழைநீர் தேக்கி வைக்க இயலாத நிலையில் உள்ளதாக விவசாயிகள் குற்றம் சாட்டுகின்றனர். மேலும் அணையின் கரைப்பகுதி முறையாக கட்டப்படவில்லை. மழை காலங்களில் தேக்கப்படும் நீர் கரைகள் பலம் இல்லாமல் இருப்பதால் ஊற்றடித்து வீணாக ஆற்றில் செல்கிறது. இதனால் இரண்டே மாதத்தில் அணையில் நீர் முற்றிலும் வற்றி விடுகிறது. 160 ஏக்கர் பாசனத்திற்காக கட்டப்பட்ட அணைக்கட்டு ஒரு ஏக்கர் விவசாயத்திற்க்கு கூட நீர் பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.

தற்போது அணையின் கரைகள் முழுவதும் சேதமடைந்து, அணையின் உட்பகுதியில் ஆக்கிரமிப்பாளர்கள் தென்னை, மா, மரங்களை வைத்து விவசாயம் செய்து வருகின்றனர். எனவே அணையில் நீர் தேக்கி வைக்க இயலாததால் அந்த பகுதியில் உள்ள விவசாயிகளின் நிலத்தடி நீர்மட்டம் குறைந்தும் விவசாயம் செய்ய முடியாத நிலையில் உள்ளனர். பல கோடி ரூபாய் செலவில் மழை நீரை தேக்கி வைத்து பாசன வசதி பெற வேண்டும் என்பதற்காக கட்டப்பட்ட அணை விவசாயிகளுக்கு எந்த பயனும் இல்லாத நிலையில் உள்ளதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.இதுகுறித்து விவசாய சங்க உறுப்பினர் கூறுகையில், ‘அணையின் உட்பகுதியில் 10 அடிக்கு மேல் வானம் தோண்டி காங்கிரட் போட்டு 20 அடி உயரத்திற்கு சுவர் எழுப்பி கரை மற்றும் மதகுகளை சீரமைத்து ஆக்கிரமிப்புகளை அகற்றி மழை நீரை சேமித்து அப்பகுதியில் உள்ள கிணறுகள் மற்றும் போர்களில் நிலத்தடி நீர்மட்டம் உயர்த்துவதற்காவது தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றனர்.

Related Stories: