அருப்புக்கோட்டை டவுன் காவல்நிலையத்திற்கு குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் நியமிக்க கோரிக்கை

அருப்புக்கோட்டை: அருப்புக்கோட்டை பந்தல்குடி ரோட்டில் டவுன் காவல் நிலையம் உள்ளது. இதில் சட்டம் ஒழுங்கு பிரிவு மற்றும் குற்றப்பிரிவு செயல்படுகிறது. இந்த காவல் நிலையத்திற்கு அருப்புக்கோட்டை நகர் மற்றும் பாலையம்பட்டி, கோபாலபுரம், காந்திநகர், புளியம்பட்டி உட்பட பகுதிகள் அடங்கி உள்ளது. நகர் மற்றும் புறநகர் பகுதிகளில் குற்றச்சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க கண்காணிப்பதற்கு இந்த பிரிவு செயல்படுகிறது. இந்த பிரிவிற்கு ஒரு இன்ஸ்பெக்டர், ஒரு எஸ்எஸ்ஐ, இரண்டு ஏட்டுக்கள், 2 கிரேடு ஒன் போலீசார் உள்ளனர். இந்த பிரிவிற்கு ஒரு பெண் இன்ஸ்பெக்டர் பணியில் இருந்தார். கடந்த ஜனவரி மாதம் 17ம் தேதி பணியிடம் மாறுதல் ஆகி சென்றுவிட்டார்.இங்குள்ள பணிகளை எஸ்எஸ்ஐயும், போலீசாரும் பார்க்கின்றனர். குற்றச்சம்பவம் தொடர்பான புகார் வந்தாலும், மேலும் பத்திரம், பள்ளிச் சான்று காணாமல் போனது குறித்து புகார் வந்தால் வழக்குப்பதிவு செய்ய இன்ஸ்பெக்டர் இல்லாததால் கிடப்பில் போடப்பட்டுள்ளது. பொதுமக்கள் தினந்தோறும் புகார் கொடுக்க அலைந்தவண்ணம் உள்ளனர்.

எனவே, மாவட்ட நிர்வாகம் 3 மாத காலமாக காலிப்பணியிடமாக இருக்கும் குற்றப்பிரிவிற்கு இன்ஸ்பெக்டர் உடனடியாக நியமிக்க வேண்டும் மற்றும் கூடுதலாக எஸ்ஐக்கள், போலீசாரையும் நியமிக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், ‘‘சமீப காலமாக நகரில் பல்வேறு பகுதிகளில் வீடுகளின் முன்பு நிறுத்தப்பட்டிருந்த இருசக்கர வாகனங்கள் திருட்டு, பூட்டிய வீட்டை உடைத்து நகரில் கொள்ளை, வழிப்பறி என நடந்து வருகிறது. தற்போது பசும்பொன் முத்துராமலிங்கம் தெரு, பசும்பொன்நகர், பாலையம்பட்டி ஆகிய பகுதிகளில் கூட திருட்டுச்சம்பவங்கள் நடந்துள்ளது. ஆனால் இதுவரை குற்றவாளிகளை கண்டுபிடிக்க முடியவில்லை. குற்றச் சம்பவங்கள் தொடர்ந்து நடந்து வருகிறது. மேலும் சான்றிதழ்கள், பத்திரங்கள் காணவில்லை குறித்து புகார் கொடுத்தும் நடவடிக்கை எடுக்க முடியவில்லை.

 குற்றப்பிரிவுக்கு இன்ஸ்பெக்டர் இல்லாததால் பணிகள் தேக்கம் அடைந்துள்ளது. திருட்டு சம்பவங்களை தடுக்க வேண்டிய நடவடிக்கையும் எடுக்க முடியவில்லை. சட்டம் ஒழுங்கு இன்ஸ்பெக்டர் கூடுதலாக குற்றப்பிரிவையும் சேர்த்து பார்க்க முடியவில்லை. எனவே குற்றப்பிரிவிற்கு தேவையான போலீசார் நியமித்து நகர் முழுவதும் இரவு நேரங்களில் சந்தேகப்படியான நபர்களை கண்காணிப்பது, பூட்டிய வீடுகளை கண்காணிப்பது போன்ற பணிகளில் ஈடுபட செய்ய வேண்டும்.

Related Stories: