டோல் ஊழியரை 10 கி.மீ கதறவிட்ட லாரி டிரைவர்

திருமலை: ஆந்திராவில் கட்டணம் வசூலிக்க லாரியின் முன்பகுதியில் ஏறி நின்ற டோல்கேட் ஊழியரை, டிரைவர் 10 கி.மீ. தூரத்துக்கு கடத்திச் சென்றார். அப்போது டோல்கேட் ஊழியர்கள் மற்றும் போலீசார் லாரியை விரட்டி மடக்கிய சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டதுஆந்திர மாநிலம், கர்னூல் மாவட்டம்,  குத்தி டோல்கேட்டில் ஹரியானா மாநிலத்தை சேர்ந்த லாரி நேற்று நிற்காமல் சென்றுவிட்டது. எனவே டோல்கேட் ஊழியர்கள் ஒரு லாரி டிரைவர் சுங்க கட்டணம் செலுத்தாமல் சென்றுவிட்டதாகவும், அந்த லாரியை நிறுத்தும்படியும் அமகதாடு டோல்கேட்டுக்கு போனில் தகவல் தெரிவித்தனர். இதனையடுத்து அமகதாடு சுங்கச்சாவடி அருகே லாரி மெதுவாக வந்தது. அப்போது ஊழியர் சீனிவாஸ் லாரியை நிறுத்தி லாரியின் முன்புறம் ஏறி நின்று டிரைவரிடம் விசாரிக்க முயன்றார். ஆனால் லாரியின் முன்பகுதியில் சீனிவாசன் ஏறியபோது, டிரைவர் அதனை கண்டுகொள்ளாமல் வேகமாக ஓட்டி சென்றார். உஷாரான டோல்கேட் ஊழியர்கள் 4 பைக்குகளுடன் லாரியை துரத்திச் சென்றனர். மேலும், நெடுஞ்சாலை போலீசாருக்கும் தகவல் கொடுத்தனர். இதனால் போலீசாரும் லாரியை துரத்தினர். இதனையடுத்து 10 கிலோ மீட்டருக்கு லாரி சென்ற நிலையில், வேல்துருத்தி அருகே லாரியை போலீசார் தடுத்து நிறுத்தி சீனிவாஸை மீட்டனர். லாரியில் இருந்து கீழே விழாதபடி, லாரியை இறுக்க பிடித்த திகிலுடன் பயணித்த சீனிவாஸ் நிம்மதி பெருமூச்சுவிட்டார். இதுதொடர்பாக, லாரி டிரைவரை பிடித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவத்தின் காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Related Stories: