தேர் திருவிழா விபத்தில் 11 பேர் உயிரிழப்பு: பேரவையில் முதல்வர் இரங்கல்

தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டம், களிமேடு கிராமத்தில் நடைபெற்ற தேர்த் திருவிழாவின்போது, எதிர்பாராதவிதமாக, தேர், மின் கம்பியில் உரசியதால் விபத்து ஏற்பட்டு, சம்பவ இடத்திலேயே 11 பேர் உயிரிழந்து விட்டனர் என்ற நெஞ்சை உலுக்கும் செய்தியினை இப்பேரவைக்கு மிகுந்த வருத்தத்தோடு தெரிவித்துக் கொள்கிறேன் இந்த விபத்தில் காயமடைந்துள்ள 16 பேர்களும் தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களுக்குத் தேவையான அனைத்து சிறப்பு சிகிச்சைகளையும் அளிப்பதற்கு நான் உத்தரவிட்டுள்ளேன்.  மேலும், இப்பணிகளை மேற்பார்வையிடவும், துரிதப்படுத்திடவும், தஞ்சாவூர் மாவட்ட பொறுப்பு அமைச்சர் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, மக்கள் பிரதிநிதிகளும், அரசு உயர் அலுவலர்களும் சம்பவ இடத்திற்கு அனுப்பப்பட்டுள்ளார்கள்.

 

இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தாருக்கு தலா 5 லட்சம் முதல்வரின் பொது நிவாரண நிதியிலிருந்து உடனடியாக வழங்க உத்தரவிட்டுள்ளேன். விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு மரியாதை செலுத்திடும் வகையில், பேரவையில்  இரங்கல் தீர்மானத்தினை நிறைவேற்றித் தருமாறு கேட்டுக் கொள்கிறேன். மிகுந்த துயரமான இச்சம்பத்தில் உயிரிழந்தவர்களைப் பிரிந்து வாடும் அவர்தம் குடும்பத்தினருக்கு இப்பேரவை ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவிக்கும் தீர்மானத்தை நான் முன்மொழிகிறேன்.இவ்வாறு முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசினார். தொடர்ந்து அனைத்து உறுப்பினர்களும் 2 நிமிடம் அஞ்சலி செலுத்தினர். பின்னர் முதல்வர் தஞ்சாவூருக்கு புறப்பட்டுச் சென்றார்.

Related Stories: