×

கல்வித்துறையில் உயரதிகாரிகள் சொத்துக்களை ஆய்வு செய்ய வேண்டும்: லஞ்ச ஒழிப்புத்துறைக்கு ஐகோர்ட் கிளை உத்தரவு

மதுரை: இடமாறுதல் உத்தரவை ரத்து செய்யக் கோரி புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் தொடர்ந்த வழக்கை விசாரித்த நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம் பிறப்பித்த உத்தரவு:
லஞ்ச ஒழிப்புத்துறையில் தேவையான அளவுக்கு அதிகாரிகளைக் கொண்ட சிறப்பு குழுக்களை அமைத்து, துறைவாரியாக தேவையான விவரங்களை சேகரித்து, ஊழலில் ஈடுபடும் அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். அரசுத்துறைகளில் குறிப்பாக பள்ளி கல்வித்துறையில் நடைபெறும் லஞ்சம் மற்றும் ஊழல் நடவடிக்கைகள் குறித்து விசாரிப்பதற்காக லஞ்ச ஒழிப்புத் துறைக்கு தேவையான அளவில் போலீசாரை ஒதுக்க டிஜிபி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பள்ளிக் கல்வித்துறையிலுள்ள குரூப் ஏ மற்றும் குரூப் பி பணியிலுள்ள உயரதிகாரிகளின் சொத்துக்கள் குறித்து பணிப்பதிவேட்டில் குறிப்பிடப்பட வேண்டும். ஆய்வின்போது முறைகேடுகள் இருப்பது உறுதி செய்யப்பட்டால் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். பல்வேறு ஆசிரியர் சங்கங்கள் மற்றும் அதன் நிர்வாகிகளின் சொத்துக்கள் குறித்தும் தகவல்கள் சேகரிக்க வேண்டும். இது பள்ளிக்கல்வித்துறையின் ஊழல்களை பெருமளவு குறைக்க உதவும்.
ஊழல் மற்றும் முறைகேடுகள் தொடர்பாக புகார்கள் வந்தால் அது தொடர்பான விவரங்களை முறையாக சேகரித்து, உறுதி செய்யப்பட்டால் விதிகளின் அடிப்படையில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த வழக்கை பொறுத்தவரை மனுதாரரின் குற்றச்சாட்டு போதுமான அளவுக்கு நிரூபிக்கப்படாததால் மனு தள்ளுபடி செய்யப்படுகிறது என நீதிபதி உத்தரவிட்டார்.

Tags : ICC ,Anti-Corruption Department , education sector, inspect assets,Anti-Corruption Department
× RELATED ஐசிசி உலக கோப்பை ‘டூர்’ நியூயார்க்கில் தொடங்கியது