×

திருப்பூர் பனியன் அதிபர் பதுக்கி வைத்த கறுப்பு பணம்: ரூ2.5 கோடி கொள்ளையடித்த 4 பேர் கைது: சொகுசு வீடு, கார், நகைகளுடன் வாழ்ந்ததாக பரபரப்பு வாக்குமூலம்

திருப்பூர்,: திருப்பூர் சின்னியகவுண்டன்பாளையத்தை சேர்ந்தவர் துரைசாமி (58). பனியன் நிறுவனம் நடத்தி வருகிறார். நிறுவனம் அருகே பிரமாண்ட வீடு உள்ளது. இந்த வீடு அருகே உபயோகப்படுத்தாத பழைய வீடும் உள்ளது. கடந்த ஜனவரி 3ம் தேதி இந்த வீட்டில் இருந்த ரூ.1 லட்சம், 30 பவுன் நகை, பத்திர நகல்கள் கொள்ளை போனதாக துரைசாமி புகார் அளித்தார். திருப்பூர் சென்ட்ரல் போலீசார் வழக்குப்பதிந்து  விசாரணை நடத்தினர். இதில், கடந்த ஆண்டு நவம்பர் 25ம் தேதி வீட்டை சுத்தம் செய்து வர்ணம் பூசும் வேலையில் திருவண்ணாமலையை சேர்ந்த சதீஷ் (29), சக்தி (24), தாமோதரன் (33) மற்றும் நீலகிரி மாவட்டத்தை சேர்ந்த ராதாகிருஷ்ணன் (53) ஆகியோர் ஈடுபட்டது தெரியவந்தது.
சந்தேகத்தின் பேரில் அவர்களை தேடியபோது பெரும் அதிர்ச்சி காத்திருந்தது. சாதாரண தொழிலாளிகளாக இருந்த அவர்கள் சொந்த வீடு, கார், பைக், நகையுடன் செல்வசீமான்கள் போல் இருந்தனர். அவர்களிடம் கிடுக்கிப்பிடி விசாரணையில் பனியன் அதிபர் வீட்டில் கொள்ளையடித்ததை ஒப்புக்கொண்டனர்.அவர்கள் கூறியதாவது:  நாங்கள் துரைசாமியின் வீட்டிற்கு வெள்ளையடிக்க வந்தோம். அப்போது துரைசாமி வீட்டின் ரகசிய அறையில் .2000 ரூபாய் நோட்டுகள் அடங்கிய கட்டுக்கட்டாக பணம் வெள்ளை நிற துணிகளில் 3 மூட்டைகளில் கட்டி வைத்திருந்தார். இதனை கொள்ளையடிக்க முடிவு செய்தோம். அதன்படி, ஜனவரி 3ம் தேதி  அங்கிருந்த பணம், 30 பவுன் நகை ஆகியவற்றை கொள்ளையடித்தோம். பண மூட்டைகளை தலையில் சுமந்து கொண்டு வெளியே சென்றோம். வெகுநாட்களாக இது குறித்து எந்த தகவலும் வெளியே தெரியவில்லை. பதுக்கி வைத்த கறுப்பு பணம் என்பதால் வெளியே யாரும் கூறவில்லை என்று நினைத்தோம். அதன்பின், அந்த பணத்தை வைத்து பங்கிட்டு நாங்கள் சொகுசாக வாழமுடிவு செய்தோம்.அதன்படி, மங்கலம் ரோடு, வீரபாண்டி, கணபதிபாளையம் பகுதிகளில் ஆளுக்கொரு சொகுசு வீடு, கார், பைக்,  பிரேஸ்லெட், தங்க நகைகள் வாங்கி சொகுசாக வாழ்ந்தோம். மீதமுள்ள பணத்தை பங்குபோட்டு கொண்டு அடுத்த கொள்ளைக்கு திட்டமிட்டோம்.  மேலும், சக்தி, சதீஷ் ஆகியோர் திருவண்ணாமலையிலும் வீடுகள் வாங்க திட்டமிட்டிருந்தனர். அதற்குள் போலீசார் எங்களை  பிடித்து விட்டார்கள் இவ்வாறு அவர்கள் கூறியதாக போலீசார் தெரிவித்தனர்.இதனையடுத்து போலீசார் சதீஷ், சக்தி, தாமோதரன், ராதாகிருஷ்ணன்  ஆகியோரை நேற்று கைது செய்தனர். அவர்களிடமிருந்து 30 பவுன் நகை, ரூ.16 லட்சம் பணம் மற்றும் கார், பைக், புதிதாக வாங்கிய வீட்டு ஆவணங்கள் அனைத்தையும் பறிமுதல் செய்தனர். அவர்கள் துரைசாமி பதுக்கிய ரூ.2 கோடியே 50 லட்சம் கறுப்பு பணத்தை கொள்ளையடித்திருக்கலாம் என்று போலீசார் கூறினர்.

Tags : Tiruppur ,Banyan ,Chancellor , black money, 4 arrested
× RELATED திருப்பூரில் இருந்து தேர்தலில்...