×

வன்முறை செயல், சொத்துகளை சேதப்படுத்த கூடாது: அரசு பள்ளி மாணவர்களுக்கு டிஜிபி சைலேந்திரபாபு அறிவுரை

சென்னை: பள்ளிகளில் வன்முறை செயல்களிலோ அல்லது பொது சொத்துகளை சேதப்படுத்தவோ கூடாது என்று அரசு பள்ளி மாணவர்களுக்கு டிஜிபி சைலேந்திரபாபு அறிவுரை வழங்கியுள்ளார். தமிழக காவல் துறை டிஜிபி சைலேந்திரபாபு தனது முகநூல் பதிவின் மூலம் அரசு பள்ளியில் படித்து வரும் மாணவர்களுக்கு அறிவுரை கூறியிருப்பதாவது: நான் 2  காணொலிகளை பார்த்தேன். அரசு பள்ளி மாணவர்களில் ஒருவர் ஆசிரியர் ஒருவரை தாக்க முற்படுகிறார். இன்னொரு இடத்தில் அரசு பள்ளி மாணவர்கள் வகுப்பறையில் இருக்கக்கூடிய இரும்பு மேசை மற்றும் நாற்காலியை  மிகவும் சிரமப்பட்டு உடைக்கின்றனர்.

அரசு பள்ளி மாணவர்களே, நானும் அரசு பள்ளியில் தான் படித்தேன். நமது பெற்றோர்கள் நம்மை ஏன் அரசு பள்ளிக்கு அனுப்புகின்றனர் என்பதை யோசித்து பார்த்துள்ளீர்களா? அவர்களிடத்தில் பெரிய வருமானம் கிடையாது. அதாவது அவர்களிடத்தில் அதிகமான சொத்துகள் கிடையாது. வருமானமில்லை. ஆனால் நீங்கள் உங்களுக்கு சொத்துகள் இல்லை என்று நினைத்து விடாதீர்கள். உங்களின் பெற்றோர்களுக்கு தான் சொத்துகள் கிடையாது. ஆனால் மாணவர்களாகிய உங்களுக்கு நிறைய சொத்துகள் உள்ளது. நிறைய ஆதாரங்கள் உள்ளது. அது என்ன ஆதாரம், என்ன சொத்து என்று பார்த்தீர்கள் என்றால், அரசு பள்ளி இருக்கிறது அல்லவா, அது தான் உங்கள் சொத்து.

அங்கு ஒரு விளையாட்டு மைதானம் இருக்கிறது அல்லவா, அது தான் உங்கள் சொத்து, அங்கு வகுப்பறை இருக்கிறது அல்லவா, அது தான் உங்கள் சொத்து. அங்கே இருக்கின்ற மேசை மற்றும் நாற்காலியும் தான் உங்கள் சொத்து.
 ஆசியரியர் தான் உங்கள் சொத்து. அதுபோன்ற ஆசிரிய பெருமக்களால்தான் நான் இந்த நிலையில் இருக்கிறேன். இந்த காவல் துறை தலைமை அலுவலகத்தில் இப்பதவியில் அவர்களால் தான் அமர்ந்துள்ளேன். அப்படிப்பட்ட ஆசிரியரை அடிப்பதற்கு ஒரு மாணவர் கை ஓங்குகின்றான். ஏன் இதுபோன்று நிலைமைகள் ஏற்படுகின்றன என்பது எனக்கு சரியாக தெரியவில்லை.

இது உங்கள் ஆதாரங்களையே அழிப்பது போன்றதாகும். தயவு செய்து இதுபோன்ற செயல்களை செய்யாதீர்கள்.  நாம் பள்ளி கூடத்திற்கு மிகப் பெரிய நோக்கத்தோடு வருகின்றோம். இங்கே தான் நீங்கள் முழு மனிதராகவும், சிந்தனையாளராகவும், ஆற்றல் படைத்தவராகவும், உங்களை நீங்களே தயார் செய்ய வேண்டிய ஒரு பயிற்சி இடம் தான் பள்ளிக் கூடம். அந்த இடத்திற்கு மிகப் பெரிய மரியாதை கொடுக்க வேண்டும். ஆசிரிய பெருமக்களை உயர்வாக எண்ண வேண்டும். உங்கள் மனநிலை மாற வேண்டும். இப்படி பள்ளி கூடத்தில் வன்முறை செய்யக்கூடியது என்பது சட்டப்படி குற்றமாகும்.  சட்டம் உங்களுக்கு சில பாதுகாப்பு கொடுத்திருந்தாலும் இது ஒரு குற்றமாக தான் கருதுகிறார்கள். தயவு செய்து இந்த குற்றத்தை நீங்கள் செய்யாதீர்கள்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags : DGP ,Silenthrababu , Violence should not damage property: DGP Silenthrababu advises government school students
× RELATED பெண் ஐபிஎஸ் அதிகாரிக்கு பாலியல்...