போக்சோ நீதிமன்றத்தில் சிவசங்கர் பாபா 8ம் தேதி ஆஜர்: நீதிபதி உத்தரவு

சென்னை: சிவசங்கர் பாபாவை மீண்டும் ஜூன் 8ம் தேதி போக்சோ நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த வேண்டும் என நீதிபதி தமிழரசி உத்தரவிட்டுள்ளார். கேளம்பாக்கம் அருகே உள்ள சுசில் ஹரி உண்டு உறைவிடப் பள்ளியில், படித்த  மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்ததாக பள்ளியின் நிறுவனரும் பிரபல சாமியாருமான சிவசங்கர் பாபா டெல்லியில் கைது செய்யப்பட்டார். இவர் மீது மொத்தம் 8 வழக்குகள் பதிவு செய்யப்பட்ட நிலையில், செங்கல்பட்டு போக்சோ நீதிமன்றத்தில் விசாரணை நடந்து வருகிறது. இதில், முதல் போக்சோ வழக்கில் மட்டும் குற்றப்பத்திரிகையை சிபிசிஐடி போலீசார் தாக்கல் செய்திருந்தனர். சுமார் 10 மாதங்களுக்கு மேலாக சிறையில் இருந்த சிவசங்கர் பின்னர் விடுவிக்கப்பட்டார். அவர் மீது இருந்த 8 வழக்குகளிலும் நிபந்தனை ஜாமீன் வழங்கப்பட்டது. இந்நிலையில், கடந்த வாரம் சிறையில் இருந்து வெளியே வந்தார். குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டிருந்த வழக்கின் மீதான விசாரணை நேற்று நடந்தது. இதில் சிவசங்கர் பாபா நீதிமன்றத்தில் ஆஜரானார். அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்திய நீதிபதி தமிழரசி மீண்டும் வரும்  ஜூன் 8ம் தேதி ஆஜராக உத்தரவிட்டார்.

Related Stories: