×

கோடை வெயில் கொளுத்துவதால் நெல்லையில் நுங்கு விற்பனை ஜோர்: இயற்கைக்கு தனி மவுசு தான்

நெல்லை: நெல்லையில் கோடை வெயில் கொளுத்தும் நிலையில் நுங்கு, இளநீர் விற்பனை அமோகமாக நடக்கிறது. இயற்கையாக கிடைக்கும் நுங்கு, இளநீர் கடைகளில் அதிக கூட்டமும் காணப்படுகிறது. நெல்லை மாவட்டத்தில் கடந்த 40 நாட்களுக்கு மேலாக கோடை வெயில் கொளுத்துகிறது. அதிகபட்சமாக பகல் நேர வெப்ப பதிவு 100.5 டிகிரி வரை உயர்ந்தது. இதனிடையே கடந்த வாரம் மாவட்டத்தில் பெரும்பாலான பகுதிகளில் அவ்வப்போது கோடை மழை பெய்தது. இதனால் வெப்ப உயர்வு சற்று குறைந்தது.

இந்த நிலையில் தற்போது வெப்ப சலன மழை குறைந்துவிட்டது. வெப்ப பதிவு உயர்ந்துவருவதால் இரவிலும் புழுக்கம் அதிகமாக உணரப்படுகிறது. நேற்று நெல்லையில் அதிகபட்ச வெப்ப பதிவு 99 டிகிரியை கடந்தது. பகல் நேரத்தில் வெப்பம் அதிகரித்துள்ளதால் சாலையோர குளிர்பான கடைகளில் விற்பனை சூடுபிடித்துள்ளது. நுங்கு, இளநீர், வெள்ளரி, தர்பூசணி, கரும்புச்சாறு, பழச்சாறு, கேப்பை கூழ் போன்ற நீர்பான விற்பனைகடைகள் சாலையோரங்களில் அதிகளவில் தோன்றியுள்ளன.

ஒரு நுங்கு ரூ.6 முதல் 8 வரை விற்கப்படுகிறது. இதுபோல் இளநீர் ரூ.25 முதல் ரூ.40 வரை விலைகளில் விற்பனையாகிறது. வெப்ப சூட்டை தணிக்க விலையை பார்க்காமல் மக்கள் வாங்கிப் பருகி செல்கின்றனர். இதனிடையே அக்னி நட்சத்திர கத்தரிவெயில் தாக்கம் வருகிற 4ம்தேதி தொடங்க உள்ளது. 25 நாட்கள் இது நீடிப்பதால் வெப்ப பதிவு மேலும் உயர வாய்ப்புள்ளது.

Tags : Jor , Summer, Veil, Nungu Sale, Jor
× RELATED கோடை வெயிலால் விற்பனை ஜோர் மடப்புரம்...