×

காட்பாடி-பாகாயம் வழித்தடத்தில் பஸ்சில் தொங்கிய மாணவர்களை எச்சரித்த போலீசார்: டிரைவர் புகாரின்பேரில் நடவடிக்கை

வேலூர்: காட்பாடி-பாகாயம் வழித்தடத்தில் இன்று காலை பஸ்சில் தொங்கியபடி மாணவர்கள் பயணம் செய்தனர். அவர்கள் டிரைவர்கள் கூறியதை ஏற்காததால் போலீசார் எச்சரித்தனர்.
பாகாயம்-காட்பாடி வழித்தடத்தில் தினமும் ஏராளமான அரசு மற்றும் தனியார் டவுன் பஸ்கள் இயக்கப்படுகின்றன. வேலூர் மாநகராட்சியின் முக்கிய பகுதிகள் வழியாக செல்வதால் எந்த நேரமும் இந்த பஸ்களில் பயணிகள் கூட்டம் அதிகமாக காணப்படும். குறிப்பாக காலை, மாலை வேளைகளில் பள்ளி, கல்லூரி மாணவர்கள் பலர் பஸ் படிக்கட்டில் தொங்கியபடி பயணம் செய்வது வாடிக்கையாக உள்ளது.

அதேபோல் இன்று காலையும் காட்பாடியில் இருந்து பாகாயம் வரை செல்லும் அரசு டவுன் பஸ் பழைய பஸ் நிலையத்தில் பயணிகளை ஏற்றிக்கொண்டு பாகாயம் நோக்கி சென்றது. அப்போது, பஸ் படிக்கட்டுகளில் ஏராளமான மாணவர்கள் தொங்கியபடி பயணம் செய்தனர். இதை பார்த்த டிரைவர், வேலூர் தெற்கு காவல் நிலையம் அருகே பஸ்சை நிறுத்திவிட்டு, மாணவர்களிடம் படிக்கட்டுகளில் பயணம் செய்ய வேண்டாம் என அறிவுரை கூறினார். ஆனால் மாணவர்கள் அதை ஏற்றுக்கொள்ளவில்லை.

இதையடுத்து அரசு பஸ் டிரைவர் தெற்கு காவல் நிலையத்திற்கு சென்று, போலீசாரிடம் தெரிவித்தார். இதையறிந்த மாணவர்கள் சிலர் அங்கிருந்து ஓடிவிட்டனர். போலீசார் வந்து, அங்கிருந்த மாணவர்களிடம், ‘படிக்கட்டுகளில் பயணம் செய்யக்கூடாது. அவ்வாறு செய்தால் தவறி விழுந்தால் காயம் மற்றும் உயிரிழப்பும் ஏற்படும். எனவே பஸ்சினுள் சென்ற பயணம் செய்ய வேண்டும். மீறினால் நடவடிக்கை எடுக்கப்படும்’ என எச்சரித்தனர். இதையடுத்து பஸ்சினுள் மாணவர்கள் சென்றதால் டிரைவர் அங்கிருந்து பஸ்சை இயக்கி சென்றார். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Tags : Kadpadi-Bhagayam , Katpadi-Bhagayam, on the route, on the bus, hanging students
× RELATED போலி சான்றிதழ்களை தடுக்க நடவடிக்கை...