பப்ஜி மதனின் ஜாமின் மனுவை 3-வது முறையாக தள்ளுபடி செய்தது சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம்

சென்னை: பப்ஜி மதனின் ஜாமின் மனுவை சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் 3-வது முறையாக தள்ளுபடி செய்துள்ளது. தடை செய்யப்பட்ட பப்ஜி விளையாட்டு மூலம் ஆபாசமாக பேசி வீடியோக்களை பதிவேற்றி பண மோசடி செய்த வழக்கில் பப்ஜி மதன் என்கிற மதன் கைது செய்யப்பட்டார்.

இதையடுத்து, அவர் மீது பல புகார்கள் வந்ததால் சென்னை மாநகர காவல் ஆணையர் உத்தரவின் பேரில், பப்ஜி மதன் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டார். அதனையடுத்து பப்ஜி மதன் தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில் அவர் கூறியது, “மாநிலத்தில் என்னால் எந்த சட்ட ஒழுங்கு பிரச்னையும் ஏற்படவில்லை. அரசால் தடை செய்யப்பட்ட செயலியை நான் பயன்படுத்தவில்லை எனவே தன் மீதான குண்டர் சட்டத்தை ரத்து செய்யுமாறு கோரியிருந்தார்.

இந்த மனுவை விசாரித்த, சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள், குண்டர் தடுப்பு சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டிருந்த போது அளித்த கோரிக்கையை உரிய காலத்தில் காவல்துறை பரிசீலிக்கவில்லை என்பதை ஏற்று பப்ஜி மதன் மீதான குண்டர் சட்டத்தை ரத்து செய்து உத்தரவிட்டனர். இதற்க்கு இடையில் மதன் 2 முறை ஜாமின் வேண்டும் என்று மனுத்தாக்கல் செய்து அதனை நீதிமன்றம் தள்ளுபடி செய்திருந்தது.

இதனிடையே தற்போது தன் மீதான குண்டர் சட்டம் ரத்து செய்யப்பட்டதால், தனக்கு ஜாமின் வழங்க வேண்டும் என பப்ஜி மதன் மனுத்தாக்கல் செய்திருந்தார். அதனை விசாரித்த சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் 3-வது முறையாக ஜாமின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.

Related Stories: