×

தஞ்சை தேர் விபத்து நிகழ்ந்தது எப்படி?.. சட்டப்பேரவையில் அமைச்சர் செந்தில்பாலாஜி விளக்கம்..!

சென்னை: தஞ்சை தேர் விபத்து குறித்து சட்டப்பேரவையில் அமைச்சர் செந்தில்பாலாஜி விளக்கம் அளித்தார். அப்போது பேசிய அவர்; தஞ்சாவூர் களிமேடு அப்பர் கோவில் தேரோட்டமானது களிமேடு பகுதியில் கடைசி பகுதிக்கு சென்று திரும்பும் போது, தேரின் பின்புறம் இணைக்கப்பட்டிருந்த ஜெனரேட்டர் (generator) weight-ன் காரணமாக எதிர் பாராதவிதமாக ஒரு பக்கமாக சப்பரம் இழுத்து செல்லப்பட்டு சப்பரத்தின் மேல் பகுதியானது ரோட்டின் ஓரத்தில்  செல்லும் 33KV உயர் மின்னழுத்தக் கம்பியுடன் சப்பரத்தின் உச்சி பகுதி மின்கடத்து தூரத்தில் சென்றதால் 190 milli seconds-க்குள் அதாவது 0.19 விநாடிக்குள்  ரிலே (Relay) indication மூலம், கம்பியில் செல்லும் 33KV உயர் அழுத்த மின்சாரம் தானாகவே நின்று விட்டது.

தேரானது இரும்பு சட்டங்கள் மற்றும் சீரியல் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. தேரின் மேல் பகுதியில் தீ ஏற்பட்டது. இந்த 33 KV மின்பாதை 110 KV தஞ்சாவூர் GRID துணை மின்நிலையத்தில் இருந்து கரந்தை 33 KV துணை மின்நிலையத்திற்கு செல்லும் மின் பாதையாகும். இது தரை மட்டத்தில் இருந்து 23 அடிக்கும் மேலே பாதுகாப்பான உயரத்திலே செல்கிறது. ஆனால், சப்பரத்தின் பின்புறம் உள்ள ஜெனரேட்டர் OFF ஆகாமல் ஓடிக் கொண்டே இருந்திருக்கிறது. மேலும், 33 KV மின்சாரம் தானாக நின்றபோதிலும், ஜெனரேட்டர் மூலம் தொடர்ந்து மின்சாரம் தேரின் விளக்குகளுக்கு சென்று கொண்டிருக்கிறது.

அங்கிருந்த பொதுமக்கள் குறிப்பாக, அந்த சப்பரத்தில் ஏற்பட்ட தீயை அணைக்கவும், ஜெனரேட்டரை நிறுத்தவும் சப்பரத்தின் மீது தண்ணீர் ஊற்றினர் இவ்விபத்தில் 11 பேர் உயிர் இழந்தனர். 33 KV உயர் அழுத்த மின்சாரம் உடனே நின்றபோதிலும், ஜெனரேட்டரிலிருந்து மின்சாரம், இரும்பு சட்டங்களின் மேலிருந்த சீரியல் விளக்குகளுக்கு தொடர்ந்து சென்றதால் அதன் மூலம் இம்மின்விபத்து ஏற்பட்டிருக்கலாம். சப்பரத்தின் மேல் பகுதியானது, மடக்கும் விதத்தில் அமைக்கப்பட்டுள்ளது. ஆனால், இந்த மடக்கு அமைப்பானது சப்பரம் திரும்பும் இடத்தில் மடக்கப்படவில்லை.

சப்பரத்தின் உச்சிப் பகுதியினை மடக்கியிருந்தால் இந்த விபத்து முற்றிலும் தவிர்க்கப்பட்டிருக்கும். இவ்விபத்து தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது. மனிதநேயமிக்க மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் ஆறுதல் சொல்வதற்காக தஞ்சாவூர் நேரில் சென்றுள்ளார்கள். இந்த விபத்துக்கான காரணங்கள் குறித்து விசாரித்து, இது போன்ற துயர நிகழ்வுகள் இனிமேல் வரக்கூடிய காலங்களில் நடைபெறாமல் தடுத்திடுவதற்கான பரிந்துரைகளையும்  அரசுக்கு அளித்திட வருவாய்த்துறை முதன்மைச் செயலாளர் திரு. குமார் ஜெயந்த் IAS அவர்கள் தலைமையில் ஒரு நபர் விசாரணைக்கு குழு அமைத்திட முதலமைச்சர் அவர்கள் ஆணையிட்டுள்ளார்கள். இவ்வாறு கூறினார்.


Tags : Tanjore chariot ,Minister ,Senthilpolaji ,Legislative Assembly , How did the Tanjore chariot accident happen? .. Minister Senthilpolaji's explanation in the Legislative Assembly ..!
× RELATED பாஜவுக்கு முகவர்கள் இருந்தால்தானே...