×

புதுகை அருகே வீடு கட்ட அஸ்திவாரம் தோண்டிய போது பானையில் தங்கப்புதையல்: வருவாய் துறையிடம் ஒப்படைப்பு

பொன்னமராவதி: புதுக்கோட்டை அருகே வீடு கட்ட அஸ்திவாரம் தோண்டிய போது, பானையில் கிடைத்த தங்கப்புதையல் வருவாய் துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டது. புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே உள்ள ஏனாதி கிராமத்தை சேர்ந்தவர்கள் நாகராஜன்- ஜெயலட்சுமி தம்பதி. நாகராஜன் கொட்டகை அமைக்கும் கூலி தொழில் செய்து வருகிறார். ஜெயலட்சுமி 100 நாள் வேலைத்திட்டத்தில் பணிபுரிந்து வருகிறார். இவர்கள் அரசின் தொகுப்பு வீடு கட்டுவதற்காக கட்டுமான தொழிலாளர்களை கொண்டு அஸ்திவாரம் போட நேற்று குழி தோண்டினர். அப்போது மண்ணுக்குள் உடைந்த மண் பானையில் தங்க காசுகள் புதையலாக கிடைத்தது.

இதனையடுத்து கட்டுமான தொழிலாளர்கள் அதை ஜெயலட்சுமியிடம் ஒப்படைத்தனர். உடனே, அவர் விஏஓ ஆரோக்கியராஜ் மற்றும் வருவாய் துறையினருக்கு தகவல் தெரிவித்தார். பொன்னமராவதி தாசில்தார் ஜெயபாரதி தலைமையிலான வருவாய் துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று ஆய்வு செய்தனர். ஜெயலட்சுமி- நாகராஜன் தம்பதியினர், தாலுகா அலுவலகத்திற்கு சென்று உடைந்த பானையுடன் 63 கிராம் எடை கொண்ட 16 தங்க நாணயங்களை போலீசார் முன்னிலையில் வருவாய் துறையினரிடம் ஒப்படைத்தனர். அவர்களின் நேர்மையை பாராட்டி தாசில்தார் சால்வை அணிவித்தார். அந்த தங்க நாணயங்கள் முகலாயர் காலத்து நாணயமாக இருக்கலாம் என கருதப்படுகிறது. இதனையடுத்து 16 தங்க நாணயங்களும் கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டது. ஒரு தங்க நாணயம் 3.9 கிராம் எடை கொண்டது குறிப்பிடத்தக்கது.

Tags : Budugai ,Revenue Department , Renovation, foundation, pottery, goldsmithing
× RELATED ஸ்காட் பொறியியல் கல்லூரி சார்பில் வாக்காளர் விழிப்புணர்வு பேரணி