×

கொரோனா முதல் ஊரடங்கில் நாடே முடங்கியிருந்த போது 85 ஆயிரம் பேருக்கு ‘எய்ட்ஸ்’ வந்தது எப்படி?.. 10 ஆண்டில் பாதுகாப்பற்ற உடலுறவு மூலம் 17 லட்சம் பேருக்கு எச்.ஐ.வி

போபால்: கொரோனா முதல் ஊரடங்கில் நாடே முடங்கியிருந்த போது 85 ஆயிரம் பேருக்கு ‘எய்ட்ஸ்’ வந்தது எப்படி? என்பது கேள்வியாக உள்ளது. கடந்த 10 ஆண்டில் பாதுகாப்பற்ற உடலுறவு மூலம் 17 லட்சம் பேருக்கு எச்.ஐ.வி பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த சமூக ஆர்வலர் சந்திர சேகர் கவுர் என்பவர் தேசிய எய்ட்ஸ் கட்டுப்பாட்டு அமைப்பிடம் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் சில தகவல்களை பெற்றுள்ளார்.

அதன்படி, இந்தியாவில் கடந்த 2011ம் ஆண்டு முதல் 2021ம் ஆண்டுக்கு இடையில் கிட்டத்தட்ட 10 ஆண்டுகளில் பாதுகாப்பற்ற உடலுறவு மூலம் 17,08,777 பேருக்கு எச்.ஐ.வி. வைரஸ் எனப்படும் எய்ட்ஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. மாநில அளவில் பார்த்தால் ஆந்திர பிரதேசத்தில் 3,18,814 பேருக்கும், மகாராஷ்டிராவில் 2,84,577 பேருக்கும், கர்நாடகாவில் 2,12,982 பேருக்கும், தமிழ்நாட்டில் 1,16,536 பேருக்கும், உத்தர பிரதேசத்தில் 1,10,911 பேருக்கும், குஜராத்தில் 87,440 பேருக்கும் அதிகபட்சமாக பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

மேலும் இதே காலகட்டத்தில் 15,782 பேருக்கு ரத்தம் மூலம் எச்.ஐ.வி தொற்று உறுதி செய்யப்பட்டது. தாயிடமிருந்து குழந்தைக்கு எய்ட்ஸ் பரவிய வகையில் 4,423 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த 2020ம் ஆண்டு நிலவரப்படி, நாடு முழுவதும் 81,430 குழந்தைகள் உட்பட 23,18,737 பேர் எச்ஐவி தொற்று பாதிப்புடன் வாழ்ந்து வருகின்றனர். மேலும் கடந்த 2020-21ம் ஆண்டில் அதாவது கொரோனா முதல் ஊரடங்கு காலகட்டத்தில் ​​பாதுகாப்பற்ற உடலுறவு காரணமாக இந்தியா முழுவதும் 85,000க்கும் அதிகமானோர் எச்ஐவியால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 10,498 பேர், ஆந்திர பிரதேசத்தில் 9,521 பேர், கர்நாடகாவில் 8,947 பேர், மேற்குவங்கத்தில் 2,757 பேர், மத்திய பிரதேசத்தில் 3,037 பேர் என்ற அடிப்படையில் மற்ற மாநிலங்களிலும் எய்ட்சால் பலர் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த பத்தாண்டுகளில் 2011-12ல் 2.4 லட்சம் பேர் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், 2019-20ம் ஆண்டில் 1.44 லட்சமாகவும், 2020-21ம் ஆண்டில் 85,268 ஆகவும் குறைந்துள்ளது’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 10 ஆண்டுகளில் எச்.ஐ.வி தொற்று பாதிப்பு எண்ணிக்கை குறைந்திருந்தாலும், கொரோனா முதல் ஊரடங்கு காலகட்டத்திலும் பாதுகாப்பற்ற உடலுறவு காரணமாக 85,000க்கும் மேற்பட்டோருக்கு எச்.ஐ.வி தொற்று எப்படி ஏற்பட்டது என்பது கேள்வியாக உள்ளது. இருந்தும் நோய் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அந்தந்த மாவட்ட தலைநகரங்களில் உள்ள அரசு மருத்துவமனைகளின் சிறப்பு வார்டில் சிகிச்சை மற்றும் ஆலோசனைகள் வழங்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

Tags : first wave of corona , How did 85,000 people get AIDS when the country was paralyzed by the first wave of corona? .. 17 lakh people became infected with HIV through unprotected sex in 10 years
× RELATED கொரோனாவின் முதல் அலை, 2-ம் அலைகளை...