கஞ்சா வியாபாரிகளிடம் நாட்டு துப்பாக்கி பறிமுதல் : பொன்னேரி அருகே பரபரப்பு

பொன்னேரி: பொன்னேரி அருகே வீட்டில் கஞ்சா பதுக்கி வைத்திருந்த 2 பேரை நேற்று போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 2 கிலோ கஞ்சா, ஒரு நாட்டு துப்பாக்கி பறிமுதல் செய்யப்பட்டது. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி அருகே வேண்பாக்கம் பள்ளம் பகுதியில் ஒரு வீட்டுக்குள் கஞ்சா பொட்டலங்கள் பதுக்கி வைத்து விற்பனை செய்வதாக நேற்று மாலை பொன்னேரி போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதுகுறித்து தகவலறிந்ததும் இன்ஸ்பெக்டர் மார்ட்டின் தலைமையில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர்.

அங்கு போலீசார் கண்காணித்ததில், ஒரு வீட்டில் இருந்து நிறைய பேர் பொட்டலங்களுடன் வருவது தெரியவந்தது. அந்த வீட்டுக்குள் சென்று போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். இதில் பதுக்கி வைத்திருந்த 2 கிலோ கஞ்சா பொட்டலங்கள் மற்றும் ஒரு நாட்டு துப்பாக்கியை பறிமுதல் செய்தனர். அந்த வீட்டில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட 2 பேரை பிடித்து காவல்நிலையம் கொண்டு வந்து விசாரித்தனர். விசாரணையில், அவர்கள் அதே பகுதியை சேர்ந்த கார்த்திக் (28), ஜவகர் (31) எனத் தெரியவந்தது. இதுகுறித்து பொன்னேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து 2 பேரையும் கைது செய்தனர். பின்னர் இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். கஞ்சா வியாபாரிகளிடம் நாட்டு துப்பாக்கி பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories: