பரமத்திவேலூர் திருமணிமுத்தாற்றில் திடீர் வெள்ளம்-விவசாயிகள், பொதுமக்கள் மகிழ்ச்சி

ரமத்திவேலூர் : சேலத்தில் சமீபத்தில் பெய்த கோடை மழையால், பரமத்திவேலூர் திருமணிமுத்தாற்றில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

சேலம் மாவட்டம் ஏற்காடு மலையடிவாரத்தில் உற்பத்தியாகும் திருமணிமுத்தாறு சுமார் 100 கிலோ மீட்டருக்கு மேல் கடந்து வந்து நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் பகுதியில் காவிரியில் கலக்கிறது. திருமணிமுத்தாறு வரும் வழியில் சுமார் 60க்கும் மேற்பட்ட ஏரி, குளம் மற்றும் குட்டைகள், 15க்கும் மேற்பட்ட தடுப்பணை ஆகியவற்றை நிரப்பி, அதன்பின் காவிரியில் கலக்கிறது. இந்நிலையில், கடந்த சில தினங்களாக திருமணிமுத்தாற்றின் நீர்ப்பிடிப்பு பகுதிகளான சேலம் ஏற்காடு மலை அடிவாரத்தில் பெய்த கோடை மழையால், தற்போது பரமத்திவேலூர் திருமணிமுத்தாற்றில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

கடந்தாண்டு அக்டோபர், நவம்பர் மாதங்களில் பெய்த கனமழையால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் திருமணிமுத்தாறு வழித்தடங்களில் உள்ள அனைத்து ஏரி -குளங்களும் நிரம்பி, தடுப்பணைகளை கடந்து பரமத்தி அருகே சுமார் 400 ஏக்கர் பரப்பளவு கொண்ட இடும்பன் குளம் நிரம்பி, பரமத்திவேலூர் காவிரி ஆற்றில் உபரிநீர் கலந்தது. அந்த வெள்ளப்பெருக்கால் திருமணிமுத்தாற்றில் ஏற்பட்ட நீரோட்டம், ஜனவரி மாதம் வரையிலும் இருந்தது. கடந்த இரண்டு மாதங்களாக திருமணிமுத்தாற்றில் நீரோட்டம் நின்ற நிலையில், தற்போது கோடை மழை காரணமாக மீண்டும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, பரமத்தி அருகே கடைகோடியில் உள்ள பில்லூர் தடுப்பணை நிரம்பி வழிந்து, இடும்பன் குளத்தை நோக்கி தண்ணீர் செல்கிறது.

தொடர்ந்து இரண்டு ஆண்டுகளாக திருமணிமுத்தாற்றில் தண்ணீர் வரத்து சீராக இருப்பதால், அதன் வழித்தடத்தில் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்து, விவசாய கிணறுகள், வீடுகளில் உள்ள ஆழ்துளை கிணறுகளில் நீராதாரம் அதிகரித்துள்ளது. இந்த திடீர் வெள்ளப்பெருக்கால் ஆற்றங்கரையோர பகுதியில் உள்ள ஆயிரக்கணக்கான ஏக்கர் விவசாய நிலங்களில், பயிர்கள் செழிக்கும் என விவசாயிகள் மகிழ்ச்சியுடன் தெரிவித்தனர்.

Related Stories: