திருப்பூர் நஞ்சராயன் குளம் பறவைகள் சரணாலயமாக அறிவிப்பு-முதல்வருக்கு, எம்.எல்.ஏ. செல்வராஜ் நன்றி

திருப்பூர் : நஞ்சராயன் குளம் பறவைகள் சரணாலயமாக அறிவிக்கப்பட்டதற்கு, தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்து திருப்பூர் தெற்கு தொகுதி எம்.எல்.ஏ. செல்வராஜ் கடிதம் அனுப்பியுள்ளார்.தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு, திருப்பூர் தெற்கு தொகுதி எம்.எல்.ஏ. செல்வராஜ் ஒரு கடிதம் அனுப்பியுள்ளார். அந்த கடிதத்தில் அவர் கூறியிருப்பதாவது:

திருப்பூரை அடுத்த சர்க்கார் பெரியபாளையம் அருகே 440 ஏக்கர் பரப்பளவில் நஞ்சராயன் குளத்தினை பாதுகாக்கப்பட்ட பறவைகள் சரணாலயமாக அறிவிக்க பல ஆண்டு காலமாக இயற்கை ஆர்வலர்கள், வன உயிரின காப்பாளர்கள் மற்றும் பறவை ஆராய்ச்சியாளர்கள் கோரிக்கை வைத்து வந்தனர்.

 தி.மு.க. ஆட்சிக்கு வந்த பிறகு திருப்பூர் இயற்கை கழகம் அமைப்பினர், தமிழக முதல்-அமைச்சர் எங்களது நீண்ட கால கோரிக்கையினை நிச்சயம் செய்து தருவார் என என்னை நேரில் சந்தித்து, இது சம்பந்தமாக தாங்கள் தமிழக முதல்-அமைச்சரிடம் எடுத்துரைத்து பாதுகாக்கப்பட்ட பறவைகள் சரணாலயமாக அறிவிக்க செய்ய வேண்டுமென கோரிக்கை மனு அளித்தனர்.

இது தொடர்பாக தமிழக கடந்த 22-10-2021 அன்று தமிழக முதல்-அமைச்சருக்கும், வனத்துறை அமைச்சருக்கும் நஞ்சராயன் குளத்தை பாதுகாக்கப்பட்ட பறவைகள் சரணாலயமாக அறிவிக்க வேண்டி கடிதம் எழுதினேன். இதனை ஏற்று நேற்று முன்தினம் நடந்த மானியக்கோரிக்கை மீதான விவாதத்தில் திருப்பூர் நஞ்சராயன் குளத்தை ரூ.7.50 கோடி மதிப்பில் தமிழகத்தின் 17-வது பறவைகள் சரணாலயமாக அமைக்கப்படும் என்று அறிவிப்பு வெளியிடப்பட்டது.

திருப்பூர் மக்கள் மற்றும் இயற்கை வன உயிரின ஆர்வலர்களின் சார்பாக எனது கோரிக்கையை ஏற்று, திருப்பூர் நஞ்சராயன் குளத்தை பாதுகாக்கப்பட்ட பறவைகள் சரணாலயமாக அமைக்க அறிவித்த தமிழக முதல்-அமைச்சர் மற்றும் வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் ஆகியோருக்கு எனது நன்றியையும், இதற்காக தொடர் முயற்சி மேற்கொண்ட இயற்கை ஆர்வலர்களுக்கும் பறவைகள் ஆராய்ச்சியாளர்களுக்கும் எனது வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: