×

தர்மபுரி டவுன் போலீஸ் ஸ்டேசனில் விபத்தில் சிக்கிய வாகனங்களுக்கு ₹18 ஆயிரம் அபராதம்-மோட்டார் வாகன ஆய்வாளர் அதிரடி

தர்மபுரி : தர்மபுரி டவுன் போலீஸ் நிலையத்திற்கு நேரில் வந்து விபத்துக்களில் சிக்கிய வாகனங்களை தணிக்கை செய்து மோட்டார் வாகன ஆய்வாளர் போக்குவரத்து விதி மீறியதாக 15 வாகனங்களுக்கு ₹18 ஆயிரம் அபராதம் விதித்து வசூலித்தார்.தமிழகம் முழுவதும் சாலை விபத்துகளை ஏற்படுத்தும் மற்றும் விபத்துக்களில் சிக்கிய வாகனங்களை போலீசார் பறிமுதல் செய்து, வழக்குப்பதிவு செய்கின்றனர். பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்படுகிறது. இதனை தொடர்ந்து நீதிமன்றத்தில் பிணையில் வாகன உரிமையாளர்கள் வாகனங்களை எடுக்கின்றனர். தொடர்ந்து நீதிமன்றத்தில் பிணையில் இருந்து எடுக்கப்பட்ட வாகனங்கள், மோட்டார் வாகன ஆய்வாளரின் தணிக்கைக்கு உட்படுத்தப்படுகிறது.

இந்நிலையில், தர்மபுரி டவுன் காவல் நிலையத்தில் பல்வேறு விபத்துக்களில் சிக்கிய 15 வாகனங்கள் மோட்டார் வாகன ஆய்வாளரின் தணிக்கைகாக தயார் நிலையில் இருந்தது. அதன்படி, போலீஸ் ஸ்டேசனுக்கு வந்த தர்மபுரி வட்டார போக்குவரத்து அலுவலக மோட்டார் வாகன ஆய்வாளர் ராஜ்குமார் அங்கிருந்த 15 வாகனங்களை தணிக்கை மேற்கொண்டார். இதில் வாகனங்களுக்கு முறையாக காப்பீடு இல்லாதது, ஓட்டுநர் உரிமம் இல்லாதது, வாகனம் இல்லாதோர் ஓட்டுனர் உரிமம் இன்றி வாகனங்களை எடுத்துச் சென்று விபத்து ஏற்படுத்தியது உள்ளிட்ட காரணங்களுக்காக அபராதம் விதித்தார். இதில் 15 வாகனங்களுக்கும் போக்குவரத்து விதிகளை மீறியதாக ₹18 ஆயிரம் அபராதம் வசூல் செய்யப்பட்டது.

விபத்துக்களில் சிக்கிய வாகனங்களை மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலகத்திற்கு, வாகன உரிமையாளர்கள் எடுத்துச் சென்று தணிக்கைக்கு உட்படுத்தப்படும் சூழலில், தர்மபுரி மோட்டார் வாகன ஆய்வாளர் ராஜ்குமார் போலீஸ் ஸ்டேசனுக்கே வந்து ஆய்வு செய்தார். ஒருசில வாகனங்கள் மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலகத்திற்கு எடுத்துச் செல்ல முடியாத நிலையிலும், விபத்தில் சிக்கியவர்கள் வாகனங்களை எடுத்துச் செல்ல முடியாத நிலையும் இருக்கும் எனக்கருதி மோட்டார் வாகன ஆய்வாளர் நேரடியாக காவல் நிலையத்திற்கே வந்து ஆய்வு செய்ததாக போலீசார் தெரிவித்தனர்.


Tags : Dharmapuri Town Police Station , Dharmapuri: A motor vehicle inspector visited the Dharmapuri Town police station and inspected the vehicles involved in the accidents.
× RELATED தர்மபுரி டவுன் போலீஸ் ஸ்டேஷனுக்கு விருது