மன்னார்குடி அருகே ஆலங்கோட்டையில் தொல்லை கொடுத்த குரங்குகள் பிடிபட்டன-கூண்டு வைத்து பிடித்த வனத்துறையினர்

மன்னார்குடி : மன்னார்குடி அருகே ஆலங்கோட்டையில் பொதுமக்களை அச்சுறுத்தி வந்த இரண்டு குரங்குகளை வனத் துறையினர் கூண்டு வைத்து பிடித்து அடர்ந்த காட்டுப்பகுதியில் பாதுகாப்பாக விட்டதால் கிராம மக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே ஆலங்கோட்டை கிராமத்தில் உள்ள தெற்கு தெருவில் சமீப காலமாக குரங்குகள் சுற்றி திரிந்தன. எங்கிருந்தோ இடம் பெயர்ந்து வந்த குரங்குகள் மக்களுக்கு பெரும் அச்சுறுத்தலாக இருந்து வந்தன.

வீடுகளில் காய போட்டிருக்கும் துணிகளை குரங்குகள் கிழித்து எறிந்தன. திறந்து கிடக்கும் வீடுகளின் உள்ளே புகுந்து அட்டகாசம் செய்து உணவு பொருட்கள், காய்கறிகளை எடுத்து சென்றன. சிறுவர்கள் கையில் வைத்திருக்கும் உணவு பொருட்களை கூட விட்டு வைப்பதில்லை, அதனையும் குரங்குகள் பிடுங்கி தின்றன. இது குறித்து கீழத்திருப்பாலக்குடி ஊராட்சி மன்ற தலைவர் எழிலரசி மணிச்செல்வம் மன்னார்குடியில் உள்ள வனச்சரக அலுவலகத்திற்கு புகார் கொடுத்தார். இதையடுத்து வனச் சரகர் ஜெயச்சந்திரன் உத்தரவின் பேரில் வனவர் மணிமாறன் உள்ளிட்ட வனத்துறையினர் நேற்று ஆலங்கோட்டை கிராமத்திற்கு வந்தனர்.

அங்கு குரங்கு நடமாட்டம் இருந்த பகுதியில் கூண்டுகள் அமைத்து வாழைப் பழம், பொரி, முறுக்கு ஆகியவற்றை வைத்தனர். நாக்கில் எச்சில் ஊறிய நிலையில் கூண்டுக்குள் வந்த குரங்குகளை லபக் எனத் தொலைவில் இருந்தே கயிறு மூலமாக அடைத்து விட்டனர். பிடிபட்ட குரங்குகளை வனத்துறையினர் அடர்ந்த வனப்பகுதிக்குள் பாதுகாப்பாக விடுவித்தனர். பல நாட்களாக குரங்கு தொல்லையால் பாதிக்கப்பட்ட ஆலங்கோட்டை கிராமம் தெற்கு தெருவை சேர்ந்தவர்கள் வனத்துறையினர் எடுத்த அதிரடி நடவடிக்கைகளால் நிம்மதி அடைந்தனர். மேலும் துரித நடவடிக்கையில் ஈடுபட்ட வனச்சரகர் ஜெயச்சந்திரன் உள்ளிட்டோரை கிராம மக்கள் பாராட்டினர்.

Related Stories: