சனி, ஞாயிறு மட்டுமே ஒருவழி பாதை திட்டம் அமல்படுத்த வேண்டும்-குன்னூர் லாரி உரிமையாளர்கள் சங்கம் கோரிக்கை

குன்னூர் : நீலகிரி மாவட்டத்தில் கோடை சீசனை முன்னிட்டு சனி மற்றும் ஞாயிறு தினங்களில் மட்டுமே ஒருவழி பாதை திட்டம் அமல்படுத்த குன்னூர் லாரி உரிமையாளர்கள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளனர். நீலகிரி மாவட்டத்தில் கோடை சீசன் துவங்கியுள்ள நிலையில் வாகன நெரிசலை தவிர்க்கும் வகையில் ஊட்டி - குன்னூர் - மேட்டுப்பாளையம் சாலை கடந்த ஏப்ரல் மாதம் 16-ம் தேதி முதல் ஒரு வழிபாதையாக மாற்றம் செய்து மாவட்ட ஆட்சியர் அம்ரித் அறிவித்துள்ளார்.

மேட்டுபாளையத்தில் இருந்து குன்னூர், ஊட்டிக்கு வரும் லாரி உள்ளிட்ட கனரக வாகனங்களுக்கு இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. மேலும் மேட்டுப்பாளையத்தில் இருந்து ஊட்டி நோக்கி வரும் இதர வாகனங்கள் குன்னூர் வழியாக அனுமதிக்கப்படுள்ளது.  ஊட்டியில் இருந்து கோவை மற்றும் மேட்டுப்பாளையம் செல்லும் அனைத்து வாகனங்களும் கோத்தகிரி வழியாக மட்டுமே செல்ல அனுமதி வழங்கியுள்ளனர்.

கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு கோடை சீசனில் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க சனி மற்றும் ஞாயிறு தினங்களில் மட்டுமே ஒருவழி பாதை திட்டம் கடைப்பிடிக்கப்பட்டது. ஆனால் தற்போது சீசன் முடியும் வரை ஒரு வழி பாதை திட்டம் அமல்படுத்தப்பட்டுதால் டாக்சி ஓட்டுநர்கள்  மற்றும் விவசாயிகள் கடுமையாக பாதிப்படைந்துள்ளனர்.  

இது குறித்து குன்னூர் லாரி ஓட்டுநர் சங்க தலைவர் ஈஸ்வர மூர்த்தி மற்றும் செயலாளர் கணேஷ் மூர்த்தி ஆகியோர்  கூறுகையில், ஆண்டுதோறும் சீசன் மாதங்களில் சனி மற்றும் ஞாயிறு தினங்களில் மட்டுமே சுற்றுலா பயணிகள் வருகை அதிகரிக்கும் அதனால் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க ஒருவழி பாதை கடைப்பிடிக்கப்படும்.

தற்போது சீசன் முடியும் வரை ஒரு வழி பாதை அமல்படுத்தப்பட்டுதால் சுற்றுலாப்  பயணிகளை தவிர்த்து மருத்துவ தேவைக்கும் கோவை செல்வோர் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.பெட்ரோல் டீசல் விலை உச்சத்தில் உள்ள நிலையில் மேட்டுப்பாளையம் செல்ல கோத்தகிரி சுற்றி செல்ல வேண்டியுள்ளது.

அதே போல் மேட்டுப்பாளையத்தில் இருந்து கோத்தகிரி செல்ல குன்னூர் சுற்றி செல்ல வேண்டியுள்ளது. இதனால் எரிபொருள் விரயமாகிறது.சனி மற்றும் ஞாயிறு தினங்களை தவிர மற்ற தினங்களில் குன்னூர் மேட்டுப்பாளையம் சாலையில் வாகனங்கள் இன்றி வெறிச்சோடி காணப்படுகிறது. இருப்பினும் கார் உள்ளிட்ட வாகனங்கள் செல்ல போலீசார் தடை விதித்தது வருகின்றனர்.

வாடகை கார் மற்றும் வேன் உள்ளிட்ட வாகனங்கள் கோத்தகிரி சுற்றி செல்வதால் அதிக வாடகை கட்டணம் ஆகிறது. இதனால் பொது மக்கள் கடுமையாக பாதிப்படைந்துள்ளனர். எனவே மாவட்ட நிர்வாகம் உடனடியாக சனி மற்றும் ஞாயிறு தினங்களில் மட்டுமே ஒருவழி பாதை அமல்படுத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: