×

வீட்டை வெள்ளையடிக்க வந்தவர்கள் கைவரிசை திருப்பூர் தொழிலதிபர் வீட்டில் ₹2.5 கோடி கொள்ளை: கைதான 4 பேர் திடுக் வாக்குமூலம்

திருப்பூர்: திருப்பூர் தொழிலதிபர் வீட்டில் ரூ.2.5 கோடி பணம், நகை கொள்ளை தொடர்பாக 4 பேரை போலீசார் கைது செய்தனர். திருப்பூர், சின்னியகவுண்டன்பாளையத்தை சேர்ந்தவர் துரைசாமி (58). அப்பகுதியில் பனியன் நிறுவனம் நடத்தி வருகிறார். பனியன் நிறுவன வளாகத்திலேயே வீடும் உள்ளது. இவரது 3 மகள்களுக்கும் திருமணமாகி விட்டது. வீட்டில் துரைசாமி, அவரது மனைவி தனலட்சுமி மட்டும் வசித்து வந்தனர். இந்த வீட்டின் வளாகத்தில் துரைசாமியின் பழைய வீடும் உள்ளது. இதனை உபயோகிக்காமல் இருந்துள்ளனர்.

இந்நிலையில் கடந்தாண்டு ஜனவரி 3ம் தேதி பழைய வீட்டில் வைத்திருந்த ரூ.1 லட்சம், 2 பவுன் நகை, பத்திர நகல்கள் காணாமல் போனதாக 18ம் தேதி துரைசாமி சென்னை காவல்துறை தலைமையிடத்தில் புகார் அளித்துள்ளார். சென்னையிலிருந்து புகாரை திருப்பூர் சென்ட்ரல் போலீஸ் நிலையத்திற்கு பரிந்துரை செய்துள்ளனர். போலீசாரும் வழக்கு பதிவு செய்து விசாரித்து வந்தனர். இந்நிலையில் துரைசாமி, தனது வீட்டில் வைத்திருந்த ரூ.2000 நோட்டுகள் அடங்கிய பண மூட்டையும் காணாமல் போனது தெரியவந்தது. அதில் எவ்வளவு பணம் இருந்தது என்று புகார் கொடுத்தவருக்கு தெரியவில்லை. அதில் 2.5 கோடி பணம் இருக்கலாம் என தெரிவித்தனர். இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.

இந்நிலையில், போலீசார் சந்தேகத்தின்பேரில் கடந்தாண்டு நவம்பர் மாதம் துரைசாமியின் வீட்டை சுத்தம் செய்த திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த சதீஷ், சக்தி, தாமோதரன், நீலகிரி மாவட்டத்தை சேர்ந்த ராதாகிருஷ்ணன் ஆகிய 4 பேரை பிடித்து விசாரித்தனர். இதுதொடர்பாக போலீசார் கூறியதாவது: 4 பேரும், கடந்தாண்டு நவம்பர் மாதம் துரைசாமியின் வீட்டிற்கு வெள்ளையடிக்க வந்துள்ளனர். அங்கு ரகசிய அறையில் ரூ.2000 ரூபாய் நோட்டுகள் அடங்கிய கட்டுக்கட்டாக பணத்தை வெள்ளை நிற துணிகளில் பெரிய மூட்டையாக கட்டி வைத்திருந்தார். 3 மூட்டைகள் இருந்தது.

பணத்தை எப்படி கொள்ளையடிக்கலாம் என 4 பேரும் சேர்ந்து திட்டம் தீட்டியுள்ளனர். அதன்படி அங்கிருந்த பணம், 30 பவுன் நகை, ஆகியவற்றை திருடி சென்றுள்ளனர். இதுகுறித்து எந்த தகவலும் போலீசாருக்கு தெரியவில்லை என நினைத்துள்ளனர். இந்நிலையில் அவர்களுக்கு இடையே பணம், நகையை வைத்து சொகுசாக வாழலாம் என ஆசை வந்துள்ளது. இதையடுத்து கொள்ளையடித்த பணத்தில் மங்கலம் ரோடு, வீரபாண்டி, கணபதிபாளையம் பகுதிகளில் ஆளுக்கொரு சொந்த வீடு, கார்கள், இரு சக்கர வாகனங்கள், பிரேஸ்லெட், தங்க நகைகள் வாங்கி சொகுசாக வாழ்ந்துள்ளனர். மீதமுள்ள பணத்தை பங்குபோட்டு கொண்டு அடுத்த கொள்ளைக்கு திட்டமிட்டுள்ளனர். மேலும், சக்தி, சதீஷ் ஆகியோர் திருவண்ணாமலையில் வீடு வாங்க திட்டமிட்டுள்ளனர். அதற்குள் போலீஸ் வலையில் சிக்கி கொண்டனர்.

இதையடுத்து சதீஷ் (29), சக்தி (24), தாமோதரன் (33), ராதாகிருஷ்ணன் (53) ஆகியோரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களிடமிருந்த 30 பவுன் நகை, 16 லட்சம் பணம், கார், பைக், புதியதாக வாங்கிய வீட்டின் ஆவணங்கள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். இதற்கிடையே துரைசாமியிடம் இருந்த பணம் எவ்வளவு என்பது தெரியாததால், கணக்கில் காட்டாத பணமாக இருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் வருமான வரித்துறை அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்துள்ளோம். அவர்கள் இன்று விசாரிக்க உள்ளனர். இவ்வாறு போலீசார் தெரிவித்தனர்.

Tags : Kaivari Tiruppur , House white, handkerchief, Tirupur businessman, 4 persons, confession
× RELATED யானை தாக்கி விவசாயி பலி