சென்னை விமானநிலையத்தில் இருந்து புதிய, கூடுதல் விமான சேவைகள் துவக்கம்

மீனம்பாக்கம்: சென்னை விமானநிலையத்தில் இருந்து இன்னும் ஓரிரு நாட்களில் பாரீஸ் நகருக்கு கூடுதல் விமான சேவை மற்றும் அபுதாபிக்கு புதிய விமான சேவைகள் துவங்குகின்றன. மேலும், நிறுத்தப்பட்ட பிராங்க்பர்ட் விமான சேவை மீண்டும் துவங்குகிறது. இதனால் பயணிகளிடையே மகிழ்ச்சி நிலவுகிறது. கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா தொற்று பரவல் காரணமாக ஜெர்மன் நாட்டின் பிராங்க்பர்ட்-சென்னை இடையேயான விமானசேவை நிறுத்தப்பட்டு இருந்தது. இதனால் சென்னை சர்வதேச விமான நிலையம் அதிக பயணிகள் இன்றி பொலிவிழந்து காணப்பட்டது.

இதைத் தொடர்ந்து, கடந்த 25 மாதங்களுக்கு பின், பிராங்க்பர்ட்-சென்னை விமானசேவையை வரும் 29ம் தேதி (வெள்ளி) லுப்தான்சா ஏர்லைன்ஸ் மீண்டும் துவங்கவிருக்கிறது. அத்துடன், அன்றைய தினம் சென்னை-பாரீஸ் நகருக்கு இடையே கூடுதல் விமான சேவைகளை ஏர்பிரான்ஸ் ஏர்லைன்ஸ் நிறுவனம் துவக்குகிறது. மேலும், சென்னை-அபுதாபிக்கு இடையே புதிய விமான சேவைகளை வரும் 29ம் தேதி ஏர் அரேபியா ஏர்லைன்ஸ் நிறுவனம் துவங்குகிறது. அதன்படி, வாரத்தில் திங்கள், புதன், வெள்ளி ஆகிய 3 நாட்களில் சென்னையில் இருந்து பிராங்க்பர்ட் நகருக்கு விமானங்கள் இயங்கும். அதேபோல் அங்கிருந்து ஞாயிறு, செவ்வாய், வியாழன் ஆகிய 3 நாட்களில் சென்னைக்கு விமானங்கள் இயக்கப்படுகிறது. இது, அமெரிக்கா சென்று வரும் பயணிகளுக்கு வசதியாக இருக்கும்.

இதேபோல் பாரீஸ் நகரிலிருந்து சென்னைக்கு வாரத்தில் 2 நாட்கள் விமானங்கள் இயக்கப்படும். வரும் மே 2ம் தேதியில் இருந்து 3 விமானங்களாக அதிகரிக்கப்பட்டு உள்ளது. சென்னையில் இருந்து பாரீஸ் நகருக்கு செவ்வாய், வெள்ளி, ஞாயிறு ஆகிய 3 தினங்களிலும், பாரீசிலிருந்து திங்கள், வியாழன், சனி ஆகிய தினங்களில் சென்னைக்கு ஏர்பிரான்ஸ் விமானங்கள் இயங்கும்.

தற்போது சென்னையில் இருந்து சார்ஜாவுக்கும் ஏர் அரேபிய ஏர்லைன்ஸ் விமான சேவை நடத்தி கொண்டிருக்கிறது. இதைத் தொடர்ந்து, அந்நிறுவனம் இன்று முதல் புதிதாக சென்னை-அபுதாபி விமான சேவையை துவக்கியுள்ளது. வாரத்தில் திங்கள், புதன் ஆகிய 2 நாட்களில் சென்னையில் இருந்து அபுதாபிக்கும், அங்கிருந்து சென்னைக்கும் இந்த விமான சேவைகள் நடைபெறும் என ஏர்லைன்ஸ் நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.

சென்னை விமான நிலையத்தில் குறுகிய காலத்தில் அதிகளவிலான வெளிநாட்டு விமான நிறுவனங்கள் போட்டி போட்டு, புதிய விமான சேவைகளை துவக்கி வருவதால், சென்னையில் இருந்து பல்வேறு வெளிநாடுகளுக்கு சென்று வரும் பயணிகளிடையே உற்சாகமும் மகிழ்ச்சியும் நிலவி வருகிறது.

Related Stories: