×

ஊட்டியில் பேக்கிரி, டீத்தூள் கடைகளில் திடீர் ஆய்வு 10 கிலோ கலப்பட தேயிலைத்தூள் பறிமுதல்-உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் அதிரடி

ஊட்டி : ஊட்டி  நகரில் உள்ள தேனீர் கடை, தேயிலை தூள் விற்பனை நிலையங்களில் நேற்று  திடீர் ஆய்வு செய்த உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் சாயம் ஏற்றப்பட்ட 10  கிலோ கலப்பட தேயிலைத்தூளை பறிமுதல் செய்தனர்.நீலகிாி மாவட்டத்தில்  பணப்பயிராக தேயிலை விவசாயம் செய்யப்படுகிறது. இதற்கு  அடுத்தப்படியாக சுற்றுலா உள்ளது. சுற்றுலா வரும் பயணிகளும் இங்கிருந்து  தரமான தேயிலைத்தூளை மொத்தமாவோ அல்லது சில்லறையாகவோ வாங்கி செல்கின்றனர்.

சிறு சிறு கடைகள் வைத்துள்ள பொதுமக்கள் பலரும் தொழிற்சாலைகளில் இருந்து  மொத்தமாக தேயிலைத்தூளை வாங்கி அரை கிலோ, ஒரு கிலோ என சுற்றுலா பயணிகளுக்கு  சில்லறை விற்பனை செய்து வருகின்றனர். தேயிலையை நம்பி ஏராளமானோர்  நேரடியாகவும் மறைமுகமாகவும் வருமானம் ஈட்டி வருகின்றனர். இதனிடையே நீலகிரி  மாவட்டத்தில் உள்ள தேநீர் கடைகளில் சாயம் கலந்த கலப்பட தேயிலைத்தூள்  பயன்படுத்தப்படுவதாக புகார் வந்தது.  தரமான தூளை வாங்கி அதில் மரத்தூள்,  புளியங்கொட்டை போன்றவற்றை அரைத்து கலந்து சிலர் விற்பனை செய்தனர். சில தேநீர்  கடைகளில் டிக்காஷன் வருவதற்காக சாயப் பொடிகளையும் பயன்படுத்தினர்.

குறிப்பாக ஊட்டி நகரில் உள்ள சாலையோர கடைகள், தேநீர் கடைகளிலும் தேனீர்  தயாரிக்க கலப்பட தேயிலைத்தூள் பயன்படுத்தப்படுவதாக புகார் வந்தது. ஊட்டி  மட்டுமின்றி மாவட்டம் முழுவதிலும் கலப்பட டீத்தூளின் பயன்பாடு  இருந்தது. கலப்பட தேயிலைத்தூளில் தயாரிக்கப்பட்ட டீயை தொடர்ந்து அருந்தினால் பல்வேறு  உடல் கோளாறுகள் ஏற்பட வாய்ப்புள்ளது. மேலும் ஊட்டி வர கூடிய சுற்றுலா  பயணிகளை குறிவைத்து, கலப்பட தேயிலைத்தூள் விற்பனை செய்யப்படுவதாக புகார்  எழுந்தது. இது தொடர்பாக தினகரன் நாளிதழில் கடந்த சில நாட்களுக்கு முன்பு  செய்தி வெளியானது.

இந்நிலையில் மாவட்ட நியமன அலுவலர் சுரேஷ் தலைமையில் உணவு  பாதுகாப்புத்துறை அலுவலர்கள் நேற்று ஊட்டி நகராட்சி மார்க்கெட் மற்றும்  ஏடிசி மணிகூண்டு மற்றும் எட்டின்ஸ் சாலை பகுதிகளில் உள்ள சுமார் 20க்கும்  மேற்பட்ட தேநீர் கடைகள் மற்றும் தேயிலைத்தூள் விற்பனை செய்யும் கடைகளில்  திடீர் ஆய்வு  செய்தனர். அப்போது 5 கடைகளில் சாயமேற்றப்பட்ட கலப்பட  தேயிலைத்தூள் பயன்படுத்தி தேனீர் தயாரித்தது தெரியவந்தது. இதனை தொடர்ந்து  சுமார் 10 கிலோ கலப்பட தேயிலைத்தூளை பறிமுதல் செய்தனர். அந்த கடைகளுக்கு  நோட்டீஸ் வழங்கப்பட்டு தலா ரூ.2 ஆயிரம் வீதம் அபராதம் விதிக்கப்பட்டது.

மேலும் ஒரு மளிகை கடையில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள்  பயன்படுத்தப்பட்டது ஆய்வில் தெரியவந்ததை தொடர்ந்து 1 கிலோ பிளாஸ்டிக்  பறிமுதல் செய்யப்பட்டு ரூ.1000 அபராதம் விதிக்கப்பட்டது. உணவு  பாதுகாப்பு மாவட்ட நியமன அலுவலர் சுரேஷ் கூறுகையில், ‘‘நீலகிரி மாவட்டத்தில்  தற்போது கோடை சீசன் காலம் என்பதால் சுற்றுலா பயணிகள் வருகை அதிகமாக உள்ளது.

எனவே  சுற்றுலா பயணிகளுக்கு தரமான உணவு, சுகாதாரமான குடிநீர் போன்றவற்றை  ஓட்டல்கள், கடைகள் வழங்க வேண்டும். தரமான தேயிலைத்தூளை மட்டுமே விற்க  வேண்டும்.
தொடர்ந்து ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு தரமற்ற காலாவதியான உணவு  பொருட்கள் விற்பனை செய்யப்படுவது தெரியவந்ததால் நடவடிக்கை எடுக்கப்படும்’’  என்றார்.

Tags : Oodi Bakiri , Ooty: Food safety officials raided a tea shop and tea powder outlets in Ooty yesterday.
× RELATED ஊட்டியில் பேக்கிரி, டீத்தூள் கடைகளில்...