நாகை கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு கெரசின் ஊற்றி குடும்பத்தினர் தற்கொலை முயற்சி-போலீசார் தடுத்து நிறுத்தி விசாரணை

நாகை : நாகை அருகே கோகூர் புதுத்தெருவைச் சேர்ந்தவர் ராஜேந்திரன். இவரது மனைவி விஜயலட்சுமி. இவர்களது உறவினர்கள் ஜெயா, அய்யப்பன் உட்பட 6 பேர் நேற்று நாகை கலெக்டர் அலுவலகம் வந்தனர். கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் அமரும் இடத்தில் நீண்ட நேரம் அமர்ந்திருந்தனர். திடீரென அவர்கள் வைத்திருந்த துணிப்பையில் இருந்து 2 மண்ணெண்ணெய் கேன்களை எடுத்து தங்களது மீது ஊற்றிக்கொண்டு கலெக்டர் அலுவலக நுழைவு வாயிலை நோக்கி சென்றனர். இதை பார்த்தவுடன் அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த நாகூர் போலீசார் ஓடிவந்து அவர்களிடமிருந்த தீப்பெட்டியை பறித்து வீசினர்.

மேலும் போலீஸ் வாகனத்தில் வைத்திருந்த தண்ணீர் பாட்டிலை எடுத்து அவர்கள் மீது ஊற்றினர். இதன் பின்னர் அவர்களிடம் விசாரணை நடத்தினர். அப்போது அய்யப்பன் கூறியதாவது: எனது சித்தப்பா ராஜேந்திரன், சித்தி விஜயலட்சுமி. இவர்களது மகன் அம்பேத்கர். இவர் கீழ்வேளூர் அருகே கோகூர் விஏஓவிடம் உதவியாளராக தற்காலிகமாக கடந்த 4 ஆண்டு காலமாக பணியாற்றி வந்தார்.  தற்போது விஏஓ உதவியாளர் பணிக்கு நிரந்தர பணியாளர் நியமிக்கப்பட்டதால் அம்பேத்கர் விவசாய வேலை செய்து வருகிறார். இந்நிலையில் கோகூர் பகுதியில் மணல் எடுப்பதற்கு குவாரி அமைத்து சட்டத்தை மீறி மணல் அள்ளி வருகின்றனர்.

இதை தடுக்க வேண்டும் என ஊர்மக்கள் சார்பில் கடந்த 4ம் தேதி கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுக்கப்பட்டது. மீண்டும் நேற்று முன்தினம் (25ம் தேதி) கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்தனர். இந்த மனு மீது விசாரணை செய்ய வருவாய்த்துறை அதிகாரிகள் கோகூர் கிராமத்திற்கு வந்தனர். எனது சகோதரர் அம்பேத்கர் ஏற்கனவே விஏஓவிடம் தற்காலிக பணியாளராக பணியாற்றியதால் அவரை அழைத்துக்கொண்டு மணல் குவாரி அமைந்துள்ள இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர்.

இதன் பின்னர் அதிகாரிகள் சென்றவுடன் மணல் குவாரி வைத்துள்ளவர் தனது அடியாட்களுடன் அம்பேத்கர் வீட்டிற்கு சென்று மணல் குவாரி இருக்கும் இடத்தை அதிகாரிகளிடம் ஏன் காட்டி கொடுத்தாய் என கூறி அவரை தாக்கினர். மேலும் இது தொடர்பாக ஏதாவது பிரச்னை செய்தால் உனது குடும்பம், உங்களது உறவினர்கள் குடும்பத்தை தாக்கி கொலை செய்வோம் என கூறி மிரட்டி சென்றனர்.

இதில் பலத்த காயமடைந்த எனது சகோதரர் அம்பேத்கர் நாகை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து கீழ்வேளூர் காவல் நிலையத்தில் புகார் அளிக்க நாங்கள் சென்றோம். ஆனால் போலீசார் புகார் பெற மறுத்துவிட்டனர். இதனால் அவர்களிடம் அடிவாங்கி இறப்பதை விட தற்கொலை செய்து கொள்வது சிறந்தது என கருதி மண்ணெண்ணெய்யை ஊற்றி தற்கொலை செய்து கொள்ள வந்தோம் என்றார். இது குறித்து நாகூர் போலீசார் விசாரிக்கின்றனர்.

Related Stories: