திம்பம் மலைப்பாதையில் பழுதான கன்டெய்னர் லாரி தமிழகம்-கர்நாடக இடையே கடும் போக்குவரத்து பாதிப்பு

சத்தியமங்கலம் : திம்பம் மலைப்பாதையில் கன்டெய்னர் லாரி பழுதானதால் தமிழக -கர்நாடக மாநிலங்களுக்கு இடையே 5 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தமிழகம் - கர்நாடகம் இரு மாநிலத்தை இணைக்கும் திண்டுக்கல் - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் சத்தியமங்கலம் அடுத்துள்ள அடர்ந்த வனப்பகுதியில் 27 கொண்டை ஊசி வளைவுகளுடன் கூடிய திம்பம் மலைப்பாதை அமைந்துள்ளது. இந்த மலைப்பாதை வழியாக நேற்று காலை கண்டெய்னர் லாரி கோவையில் இருந்து கர்நாடகா மாநிலம் மைசூருக்கு புறப்பட்டது.

9வது கொண்டை ஊசி வளைவில் லாரி திரும்பும்போது பழுது ஏற்பட்டு நின்றது. இதனால் மலைப் பாதையில் மற்ற வாகனங்கள் செல்ல முடியாமல் நீண்ட வரிசையில் அணிவகுத்து நின்றன. தகவலறிந்த ஆசனூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து போக்குவரத்தை சீர் செய்யும் பணியில் ஈடுபட்டனர். சத்தியமங்கலத்தில் இருந்து கிரேன் வரவழைக்கப்பட்டு பழுதான லாரியை மீட்கும் பணி நடைபெற்றது.

5 மணி நேர போராட்டத்திற்கு பின் லாரி நகர்த்தி நிறுத்தப்பட்டது. இதைத்தொடர்ந்து மலைப்பாதையில் அணிவகுத்து நின்ற வாகனங்கள் ஒன்றன்பின் ஒன்றாக மெதுவாக புறப்பட்டுச் சென்றன.திம்பம் மலைப்பாதையில் கண்டெய்னர் லாரி பழுது ஏற்பட்டு நகர முடியாமல் நின்றதால் தமிழக- கர்நாடக மாநிலங்களுக்கு இடையே 5 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. போக்குவரத்து நெரிசலில் சிக்கிய வாகன ஓட்டிகள் மற்றும் பயணிகள் கடும் அவதியடைந்தனர்.

Related Stories: