×

பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை தந்த வழக்கு... ஜூன் 8-ல் சிவசங்கர் பாபா ஆஜராக செங்கல்பட்டு நீதிமன்றம் உத்தரவு..மீண்டும் சிறையில் அடைக்க வாய்ப்பு

சென்னை: பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு அளித்த வழக்கில் சிவசங்கர் பாபா  ஜூன் 8-ம் தேதி ஆஜராக செங்கல்பட்டு போக்சோ சிறப்பு நீதிமன்ற உத்தரவிட்டுள்ளது. செங்கல்பட்டு மாவட்டம் கேளம்பாக்கத்தில் உள்ள ஸ்ரீ சுஷில் ஹரி இண்டர்நே‌ஷனல் பள்ளியை சிவசங்கர் பாபா நடத்தி வருகிறார்.

இவர் தன் பள்ளியில் படிக்கும் மாணவிகளுக்கு, பாலியல் தொல்லை கொடுத்ததாக பள்ளி மாணவிகள் புகார் அளித்தனர். அந்த புகாரின் பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, அவர் கைது செய்யப்பட்டார். தற்போது இந்த வழக்குகளை சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரிக்கின்றனர்.

அவர் மீது மொத்தம் 8 வழக்குகள் உள்ளது, அதில் 6 வழக்குகளுக்கு விசாரணை கோர்ட் ஜாமீன் வழங்கியுள்ளது. ஒரு வழக்கில் உச்சநீதிமன்றம் ஜாமீன் வழங்கியது. மேலும் மீதமுள்ள ஒரு வழக்கில் சென்னை ஐகோர்ட் நிபந்தனைகளோடு சிவசங்கர் பாபாவுக்கு சில தினங்களுக்கு முன்னதாக ஜாமீன் வழங்கப்பட்டு அவர் அன்று மாலை புழல் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டார்.

இந்தநிலையில், செங்கல்பட்டு போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நீதிபதி தமிழரசி அமர்வில் இந்த வழக்குகள் விசாரிக்கப்பட்டு வருகிறது. இந்த விசாரணையில்  சிவசங்கர் பாபா ஜூன் 8-ம் தேதி ஆஜராக உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் சிவசங்கர் பாபா மீதுள்ள 8 வழக்குகளில் முதல் போக்சோ வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதனால் மீண்டும் அவர் சிறையில் அடைக்க வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


Tags : Chengalpattu Sivasankar Baba , School students sexually harassed
× RELATED மக்களவைத் தேர்தல் : தமிழ்நாட்டில்...