×

தஞ்சை அப்பர் கோயில் தேர் திருவிழாவில் மின்சாரம் தாக்கி 2 சிறுவர்கள் உட்பட 12 பேர் பலி.. மேலும் 10 பேர் காயம்

தஞ்சாவூர்: தஞ்சை அருகே களிமேடு பகுதியில் தேர் திருவிழாவின்போது மின்சாரம் தாக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 12 ஆக அதிகரித்துள்ளது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சாவூர் அருகே களிமேடு கிராமத்திலுள்ள குளத்தின் வட கரையில் அப்பர் மடம் அமைந்துள்ளது. இம்மடம் சுமார் 90 ஆண்டுகளுக்கு முன், உயிர்க்கொலை பாவம் எனக் கருதி ஊர்ப் பெரியவர்களால் உருவாக்கப்பட்டது. அப்பெருமானார் முக்தி பெற்ற தினமான சித்திரை சதய நட்சத்திரத்தில் அப்பர் குரு பூஜை ஒவ்வொரு ஆண்டும், மூன்று நாட்கள் நடைபெறும். அந்த வகையில் 94வது அப்பர் குருபூஜை விழாவை முன்னிட்டு நேற்று இரவு சப்பரம் திருவிழா விமர்சையாக நடைபெற்றது.

அப்போது பொது மக்கள் தேரை வடம் பிடித்து இழுத்து வந்தனர். மேலே சென்ற உயர் அழுத்த மின்கம்பி தேரின் மீது உரசியது. இதனால் தேர் மீது மின்சாரம் பாய்ந்ததில் 2 சிறுவர்கள் உட்பட 10 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் 10க்கும் மேற்பட்டவர்கள் படுகாயம் அடைந்தனர். மருத்துவமனையில் சேர்க்கப்பட்டவர்களில் மேலும் 2 பேர் உயிரிழந்ததால் பலி எண்ணிக்கை 12 ஆக உயர்ந்துள்ளது. தேரை இழுத்து வரும் போது, அப்பகுதியில் தண்ணீர் தேங்கி இருந்ததால் 50க்கும் மேற்பட்டவர்கள் சற்று தொலைவில் தள்ளி நின்றுள்ளனர். இதனால் அதிக உயிர்கள் பலியாவது தவிர்க்கப்பட்டதாக அப்பகுதியினர் தெரிவித்தனர். திருவிழாவின் போது, மின்சாரம் பாய்ந்த 12 பேர் பலியானது அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனிடையே தஞ்சை அருகே களிமேட்டில் தேர் விபத்து நடந்த இடத்தில் மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆய்வு மேற்கொண்டுள்ளார். மேலும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்க மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.


Tags : Thanjam Upper Temple Chariot festival , Tanjore, Upper, Temple, Chariot, Festival, Electric
× RELATED நாடு முழுவதும் 13 மாநிலங்களில் உள்ள 88...