×

மாமல்லபுரம் அருகே திருவிடந்தை நித்யகல்யாண பெருமாள் கோயில் தெப்ப உற்சவம்

மாமல்லபுரம்: மாமல்லபுரம் அருகே திருவிடந்தை நித்யகல்யாண பெருமாள் கோயில் தெப்ப உற்சவம் நேற்று முன்தினம் இரவு நடந்தது. இதில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். மாமல்லபுரம் அடுத்த திருவிடந்தை கிராமத்தில் 108 திவ்ய தேசங்களில் 62வது திவ்ய தேசமாக திகழும் நித்யகல்யாண பெருமாள் கோயில் அமைந்துள்ளது.

இங்குள்ள, கோயில் தெப்பகுளத்தில் ஆண்டுதோறும் மாசி 2வது வாரம் திங்கட்கிழமையில், தெப்ப உற்சவம் நடத்துவது வழக்கம். இதையொட்டி, இந்தாண்டு சித்திரை 2வது வார திங்கட்கிழமையான நேற்று முன்தினம் மதியம் 1 மணிமுதல் மாலை 4 மணிவரை நித்ய கல்யாண பெருமாளுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்கரம், ஆராதனை நடந்தது.  இரவு 9.30 மணிக்கு தீர்த்த குளத்தில் அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தில் காளிங்கநர்த்தனர் அலங்காரத்தில், நித்யகல்யாண பெருமாள் தேவி, பூதேவியுடன் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார்.

தொடர்ந்து, 9 சுற்று தெப்பத்தில் வலம் வந்த நித்யகல்யாண பெருமாள், அதன்பின்னர் வீதியுலா வந்தார்.  இதில், மாமல்லபுரம், திருக்கழுக்குன்றம், திருப்போரூர், செங்கல்பட்டு, தாம்பரம், காஞ்சிபுரம், சென்னை உள்பட புறநகர் பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு நித்ய கல்யாண பெருமாளை வழிபட்டனர். மாமல்லபுரம் டிஎஸ்பி ஜகதீஷ்வரன் மேற்பார்வையில், இன்ஸ்பெக்டர் ருக்மாங்கதன் தலைமையில், எஸ்ஐ விஜயகுமார் உள்பட 50க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

Tags : Thiruvidanthai Nithya Kalyana Perumal Temple Boat Festival ,Mamallapuram , Mamallapuram, Thiruvidanthai Nithya Kalyana Perumal Temple, Boat Festival
× RELATED மாமல்லபுரத்தில் சிற்பக்கலை கல்லூரி...