கர்நாடகா ஹிஜாப் விவகாரம் 2 நாட்களில் விசாரணை உச்ச நீதிமன்றம் அறிவிப்பு

புதுடெல்லி: ஹிஜாப் விவகாரத்தில் கர்நாடகா உயர் நீதிமன்ற அளித்த தீர்ப்புக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள மேல்முறையீட்டு மனுக்கள் மீதான விசாரணை 2 நாட்களில் தொடங்கப்படும் என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. கர்நாடகாவில் ஹிஜாப் அணிந்து கல்வி நிலையங்களுக்கு வர அம்மாநில அரசு கடந்த மாதம் தடை விதித்திருந்தது. இதற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட அனைத்து மனுக்களையும் கர்நாடகா உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. இதை எதிர்த்து மாணவர்கள் தரப்பு, இஸ்லாமிய அமைப்புகள் ஆகியவை உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்துள்ளன. இவை கடந்த சில வாரங்களாக நிலுவையில் உள்ளன.

இந்நிலையில், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா அமர்வின் முன்னிலையில் நேற்று ஆஜரான மூத்த வழக்கறிஞர் மீனாட்சி அரோரா, ‘ஹிஜாப் விவகாரம் தொடர்பான மேல்முறையீட்டு மனுக்கள் அனைத்தும் நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்து வருகிறது. இதில், இறுதி உத்தரவு வராமல் இருந்து வருவதால் தொடர்ந்து பிரச்னை எழுந்து வருகிறது. அதனால், மனுவை அவசர வழக்காக எடுத்து விசாரிக்க வேண்டும்,’ என கோரினார். அதை  ஏற்ற தலைமை நீதிபதி, இந்த வழக்கில் 2 நாட்களில் விசாரணைக்கு பட்டியலிடப்படும் என தெரிவித்தார்.

Related Stories: