×

ஆர்சிபிக்கு எதிராக பராக் அதிரடி அரை சதம்

புனே: ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்கு எதிராக, ராஜஸ்தான் ராயல்ஸ் வீரர் ரியான் பராக் அதிரடியாக விளையாடி அரை சதம் அடித்தார். எம்சிஏ ஸ்டேடியத்தில் நேற்று இரவு நடந்த இப்போட்டியில், டாஸ் வென்ற ஆர்சிபி அணி முதலில் பந்துவீசியது. பட்லர், படிக்கல் இருவரும் ராஜஸ்தான் ராயல்ஸ் இன்னிங்சை தொடங்கினர். படிக்கல் 7 ரன் மட்டுமே எடுத்து சிராஜ் வேகத்தில் எல்பிடபுள்யு ஆனார். அடுத்து பட்லருடன் ஆர்.அஷ்வின் ஜோடி சேர்ந்தார்.

அமர்க்களமாக 4 பவுண்டரி விளாசிய அஷ்வின் 9 பந்தில் 17 ரன் எடுத்து சிராஜ் வேகத்தில் அவரிடமே கேட்ச் கொடுத்து ஆட்டமிழக்க, ராஜஸ்தான் 4 ஓவரில் 33 ரன்னுக்கு 2 விக்கெட் இழந்து திணறியது. ஹேசல்வுட் வீசிய அடுத்த ஓவரின் முதல் பந்திலேயே பட்லர் (9 பந்தில் 8 ரன்) விக்கெட்டை பறிகொடுக்க, 33/3 என ராஜஸ்தான் சரிவை சந்தித்தது. அந்த ஓவரில் ஒரு ரன் கூட கிடைக்காமல் மெய்டனாகவும் அமைந்தது, ராஜஸ்தானுக்கு மேலும் பின்னடைவை கொடுத்தது.

இந்த நிலையில் கேப்டன் சஞ்சு சாம்சன் - டாரில் மிட்செல் இணைந்து அணியை சரிவில் இருந்து மீட்கப் போராடினர். இந்த ஜோடி 4வது விக்கெட்டுக்கு 35 ரன் சேர்த்தது. சாம்சன் 27 ரன் (21 பந்து, 1 பவுண்டரி, 3 சிக்சர்), டாரில் 16 ரன் எடுத்து பெவிலியன் திரும்பினர். ஒரு முனையில் ரியான் பராக் அதிரடியாக விளையாடி ரன் சேர்க்க... ஹெட்மயர் 3 ரன், டிரென்ட் போல்ட் 5 ரன், பிரசித் 2 ரன்னில் ஆட்டமிழந்து அணிவகுத்தனர்.

ஹர்ஷல் படேல் வீசிய கடைசி ஓவரை எதிர்கொண்ட பராக் பவுண்டரியும் சிக்சருமாகப் பறக்கவிட்டு 29 பந்தில் அரை சதம் அடித்தார். ராஜஸ்தான் ராயல்ஸ் 20 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 144 ரன் குவித்தது. பராக் 56 ரன் (31 பந்து, 3 பவுண்டரி, 4 சிக்சர்), சாஹல் (0) ஆட்டமிழக்காமல் இருந்தனர். ஆர்சிபி பந்துவீச்சில் சிராஜ், ஹேசல்வுட், ஹசரங்கா தலா 2, ஹர்ஷல் 1 விக்கெட் வீழ்த்தினர். இதையடுத்து, 20 ஓவரில் 145 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆர்சிபி களமிறங்கியது.


Tags : RCB , RCB, Baroque, Action Half Cent
× RELATED நடப்பு ஐபிஎல் தொடரின் சில போட்டிகளில்...